பாகிஸ்தானில் இருந்து வரும் உத்தரவிற்காக காத்திருந்தோம் என அகமதாபாத்தில் கைதான தீவிரவாதிகள் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையை சேர்ந்த ஐ.எஸ். தீவிரவாதிகள் குஜராத்தின் அகமதாபாத்துக்கு வருவதாக அந்த மாநில தீவிரவாத தடுப்பு பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி, கொழும்புவில் இருந்து சென்னை வழியாக அகமதாபாத் வந்த நுஸ்ரத் கனி, நப்ரான், பரீஸ் பரூக், ரஸ்தீன் ரஹீம் ஆகிய 4 பேரை, காவல்துறையினர் கைது செய்தனர்.
அகமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி மைதானத்தில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறுவதோடு, நாடு முழுவதும் மக்களவை தேர்தல் நடைபெற்று வருவதால், அவர்கள் மிகப்பெரிய தாக்குதல் நடத்த திட்டம் தீட்டியிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.
இந்நிலையில் அவர்களிடம் நடத்தப்பபட்ட விசாரணையில், தாக்குதல் நடத்தும் இடங்கள், நேரம் மற்றும் வெடிப்பொருட்கள் குறித்தும், தாக்குதல் முறைகள் குறித்தும் பாகிஸ்தானில் இருந்து வரும் தகவலுக்காக காத்திருந்தோம் என வாக்குமூலம் அளித்ததாக தீவிரவாத தடுப்புப் படையினர் தெரிவித்தனர்.