2024 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறியது நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. 6வது கோப்பை கனவை எங்கே கோட்டை விட்டது சி.எஸ்.கே.? என்பதை இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்.
2024 ஐபிஎல் தொடர் லீக் ஆட்டத்தில் வாழ்வா, சாவா போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக ஆடிய பெங்களூரு அணி அதிரடியாக ஆடி 218 ரன்கள் குவித்தது. ஐபிஎல் வரலாற்றில் எந்த அணியும் செய்யாத மிகப் பெரும் சாதனையை செய்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. இதனால், 219 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய சிஎஸ்கே, 20 ஓவர்களில் 191 ரன்கள் மட்டுமே எடுத்து அதிர்ச்சி தோல்வி அடைந்தது.
201 ரன்கள் எடுத்தால் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு இருந்தாலும், பேட்டிங்கில் நிலையான தொடக்கம் இல்லாத காரணத்தால் 27 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது சென்னை சூப்பர் கிங்ஸ். பேருக்கு மட்டுமே சென்னை அணியாக இல்லாமல், அவ்வப்போது சென்னை 28 திரைப்படத்தில் வருவது போல பல டிவிஸ்டான போட்டிகளை விளையாடுவது தான் மஞ்சள் பாய்ஸ்-ன் பழக்கப்பட்ட விஷயம்…
எப்போதுமே ஆர்சிபி அணியை எதிர்த்து நின்று அடித்து விளையாடும் சென்னை அணி, கடைசி போட்டியில் தோல்வியடைய காரணமாக இருந்தது என்ன தெரியுமா? பவர் பிளே ஓவர்களை நாலா பக்கமும் சிதற விடுவார்கள் என்று நம்பியிருந்த கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் டேரில் மிட்செல் ஆகியோர் அடுத்தடுத்து பெவிலியன் திரும்பியது தான்.
மேலும், ராஹானே மற்றும் ரச்சின் கைகளில் பவர்பிளே ஓவர் சிக்கிக்கொண்டதால், 10 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு பெங்களூர் அணி 78 ரன்கள் எடுத்திருந்த நிலையில், சென்னை அணியோ, 10 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழந்து 87 ரன்கள் எடுத்திருந்தது. குறிப்பாக சிவம் துபே வெளியேறியதும், மிகப்பெரும் பொறுப்புடன் களத்திற்கு வந்தார் மகேந்திர சிங் தோனி.
இதுபோன்ற பல சவாலான சூழல்களை சமாளித்த தோனி, களத்தில் குதித்ததும், ஆர்சிபி பந்துவீச்சாளர்கள் சில லூஸ் பால்களை வீசியதால் விமர்சனங்களுக்கு உள்ளானது. எது எப்படியோ, 201 ரன்கள் எட்டிவிட்டால் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி விடலாம் என்பது மட்டுமே சென்னை அணியின் ஒரே குறிக்கோளாக இருந்தது. அப்போது, சென்னை அணி பிளே வாய்ப்பை உறுதி செய்ய 20 ஆவது ஓவரில் 17 ரன்கள் தேவை என்ற நிலையில் யாஷ் தயாள் பந்துவீச தயார் ஆனார். முதல் பந்தை ஃபுல் டாசாக வீசிய மறு கணமே, வானத்தை பார்த்து 110 மீட்டர் தூரம் மிகப்பெரிய சிக்சராக விளாசினார் எம்எஸ் தோனி.
இலக்கை அடைய மீதம் உள்ள 5 பந்துகளில் 11 ரன்கள் தேவைப்பட்டபோது, அடுத்த பந்தை கேட்ச் கொடுத்து தோனி வெளியேறினார். ஷார்துள் தாகூர், ஜடேஜா ஆகியோர் ஏமாற்றியதால் 27 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது, நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. மேலும் பிளே ஆப் வாய்ப்பில் இருந்து நடையை கட்ட, ஆர்ப்பரித்த ஆர்சிபி வீரர்கள், பிளே ஆப் வாய்ப்பை கொண்டாடினர்.
தோனிக்கு கடைசி சீசன், 6 வது ஐபிஎல் கோப்பை, ருதுராஜின் வெற்றிப் பயணம் என்றெல்லாம் பேசிய சென்னை ரசிகர்கள், மீம் போட கூட மனமில்லாமல், மைதானத்தில் அனைவரும் காத்துக்கொண்டிருந்தனர். இந்த தோல்வியை தாங்க முடியாமல், தோனி கண்கலங்கியது நேரலையில் காட்டப்பட்டது.
அதை கண்டு சிஎஸ்கே ரசிகர்களும் பெரும் சோகத்தில் ஆழ்ந்தனர். மேலும், வழக்கம் போல் தோனி வருவார், ஓய்வு குறித்து ஏதேனும் கூறுவார் என நினைத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது. இருந்தாலும் Definitely Not எனும் அந்த மந்திரச் சொல்லை அவர் சொல்லாமல் இருப்பதும் கூட ஓய்வுக்கான மறுப்பாக ஏற்றுக் கொண்டுள்ளனர் சிஎஸ்கே ரசிகர்கள்….