நியாயவிலைக் கடைகளின் நேரத்தை முறையாக கடைபிடிக்க வேண்டும் எனவும் கடைப்பிடிக்காத பணியாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டுறவுத்துறை அதிரடி உத்தரவிட்டுள்ளது.
நியாய விலை கடைகளை உரிய நேரத்தில் திறக்க பணியாளர்களுக்கு ஏற்கனவே தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இருப்பினும், சில நியாயவிலைக் கடைகள் உரிய நேரத்தில் திறப்பதில்லை என புகார்கள் பெறப்படும் நிலையில் பல்வேறு அதிரடி உத்தரவுகளை கூட்டுறவுத்துறை பிறப்பித்துள்ளது.
குறிப்பாக, சென்னை மற்றும் புறநகரில் காலை, 8:30 மணி முதல் பகல் 12:30 மணி வரையும்; பிற்பகல், 3:00 மணி முதல் இரவு 7:00 மணி வரையும் செயல்பட உத்தரவிட்டுள்ளது.
மற்ற மாவட்டங்களில் காலை 9 மணி முதல் பிற்பகல் 1மணி வரையும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரையும் செயல்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்களுக்கு உரிய முறையில் பொருட்கள் வழங்க வேண்டும் எனவும், இதனை கடைப்பிடிக்காத பணியாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.