உப்பு முதல் ஐ-போன் வரை அனைத்து தொழில்துறைகளிலும், சர்வ தேச அளவில் முன்னணியில் நிற்கும் டாடா குழுமத்தின் தலைவராக நீண்ட காலமாக ஒரு தமிழர் கோலோச்சுகிறார். எப்படி இந்த உயரத்தை அவரால் தொட முடிந்தது ? எப்படி டாடா குழுமத்தை அவரால் முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல முடிந்தது ? அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
1868ம் ஆண்டு ஜாம் ஷெட் நுஸ்ஸர்வான் ஜி டாடாவால் தொடங்கப்பட்ட , டாடா நிறுவனம் , வழி வழியாக அவர் குடும்ப வாரிசுகள் தலைமையில் இயங்கி வருகிறது. உலகில் உள்ள 6 கண்டங்களில் 115 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தொடர்ந்து வெற்றிகரமாக இயங்கிவருகிறது.
டாடா நிறுவனத்தின் தலைவராக 1991ம் ஆண்டு ரத்தன் டாடா பதவியேற்றதிலிருந்து டாடா அபார வளர்ச்சியைக் கண்டது. இவர் காலத்தில் தான் 85 நாடுகளுக்கும் மேல் டாடா நிறுவனம் பரந்து விரிந்தது. ஆனால், அது அவ்வளவு எளிதாக நடந்து விடவில்லை. ரத்தன் டாடா தலைவரான போது முதலில் டாடா நிறுவனங்களின் தலைவர்களைக் கட்டுக்குள் கொண்டுவருவதே பெரும் சவாலாக இருந்தது.
நிறுவனத்தின் உள்விவகாரங்களை சமாளிக்கவே அவருக்கு நேரம் போதாமல் இருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக நிறுவனத்தை முன்னோக்கி எடுத்துச் சென்றார். ரத்தன் டாடாவுக்கு அப்போது பக்கப் பலமாக இன்னும் சொல்லப்போனால் ரத்தன் டாடாவின் வலது கரமாக இருந்தவர் தான் சந்திரா என்று எல்லோராலும் அழைக்கப்படும் நடராஜன் சந்திர சேகரன்.
தமிழகத்தில் 1963ம் ஆண்டு நாமக்கல் மாவட்டம் மோகனூர் கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்த சந்திர சேகரனுக்கு , சிறுவயதிலேயே, அறிவியல் மீது நாட்டமிருந்தது.
அரசு பள்ளியில் தமிழ்வழி படித்த இவர், கோயம்புத்தூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் பயன்பாட்டு அறிவியலில் இளங்கலைப் பட்டம் பெற்ற பின், திருச்சியில் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் கணினி பயன்பாட்டு இயலில் முதுகலை பெற்றார்.
1987ம் ஆண்டு TCS நிறுவனத்தில் சேர்ந்த நடராஜன் சந்திரசேகரன், 2009ம் ஆண்டு அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியானார். இவர் காலத்தில் டாடா குழுமத்தின் மொத்த வருமானத்தில் 60 சதவீதம் TCS-ன் பங்காக இருந்தது.
இந்நிலையில், 2013ம் ஆண்டு டாடா சன்ஸ் தலைவராக மிஸ்திரி நியமிக்கப்பட்டதும், பிறகு அவர் 2016ம் ஆண்டு நீக்கப்பட்டதும், இடைக்காலத் தலைவராக ரத்தன் டாடா திரும்ப வந்ததும், தன்னை நீக்கியது செல்லாது என்று மிஸ்திரி உச்சநீதிமன்றம் சென்று தோற்றதும் வேறு துணைக்கதை.
டாடாவின் அடுத்த தலைவர் யார் ? என்ற போட்டியில் இந்திரா நூயி, அமித் சந்திரா, முத்துராமன், அருண் சரின் , நோயல் டாடா, இஸ் ஹாத் ஹுசைன் என ஒரு டஜன் பெயர்கள் அடிபட்டன.
ஆனால், யாருமே எதிர்பார்க்காத வகையில் , 2017ம் ஆண்டு பிப்ரவரி 17 ஆம் தேதி , டாடா சன்ஸ் நிறுவனத் தலைவராக சந்திரசேகரனை ரத்தன் டாடா முன்மொழிந்தார். டாடா நிர்வாகக் குழு உறுப்பினர்கள் அனைவரும் ஏக மனதாக சந்திரசேகரனைத் தலைவராக ஏற்றுக்கொண்டனர்.
5 ஆண்டுகள் முடிந்து, 2022ம் ஆண்டு, மீண்டும் இரண்டாவது முறையாக இவரையே டாடா குழுமத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.
நடராஜன் சந்திரசேகரனின் வழிகாட்டுதலின் கீழ் டாடா குழுமம் 2017ம் ஆண்டு 36,728 கோடி ரூபாய் லாபம் ஈட்டிய டாடா குழுமம் 2022 ஆம் ஆண்டு 64,267 கோடி ரூபாய் ஒருங்கிணைந்த லாபத்தைப் ஈட்டியுள்ளது.
கடந்த 5 ஆண்டுகளில், டாடா குழுமத்தின் வருவாய் 6 லட்சம் கோடி ரூபாயில் இருந்து 9.44 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
இதன் தொடர்ச்சியாக, கடந்த மே 13ம் தேதி டாடா எலெக்ட்ரானிஸ் நிறுவனத்தின் தலைவராகவும் பொறுப்பேற்றிருக்கிறார் நடராஜன் சந்திரசேகரன்.
இவரது ஆலோசனை படியே செமி கண்டக்டர் உற்பத்தி ஆலையை குஜராத்தில் டாடா தொடங்கியிருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது.
இவர் டாடாவின் தலைவராக பொறுப்பேற்ற போது அம்பானி, ஆனந்த் மகேந்திரா உட்பட இந்திய தொழிலதிபர்கள் உளமார பாராட்டியதில் இருந்தே இவரின் திறமை தெரியும்.
டாடா அறக்கட்டளையின் பல நிறுவனங்களில் ரத்தன் டாடா மற்றும் அவரது சகோதரர்கள் ஜிம்மி டாடா மற்றும் நோயல் டாடா ஆகியோர் உறுப்பினர்களாக இருக்கின்றனர்.
டாடா அறக்கட்டளைகளில், முதன்மையான நிறுவனங்களான சர் டோராப்ஜி டாடா அறக்கட்டளை மற்றும் சர் ரத்தன் டாடா அறக்கட்டளை ஆகியவற்றின் அறங்காவலர்களாக லியா டாடா, மாயா டாடா மற்றும் நெவில் டாடா ஆகியோரை நியமிக்க ரத்தன் டாடா ஒப்புதல் அளித்துள்ளார்.
இதன் மூலம், டாடா குடும்பத்தின் இளைய தலைமுறையினரும் இப்போது ஐந்து அறக்கட்டளை நிறுவனங்களின் குழுவில் இணைந்துள்ளனர்.
லியா, மாயா மற்றும் நெவில் ஆகியோர் நோயல் டாடாவின் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் மிக பழமையான மற்றும் மிகப் பெரிய கார்ப்பரேட் நிறுவனமான டாடா குழுமத்தில் தலைவராக இருப்பதுசாதாரண காரியமல்ல.
வர்த்தகம், லாபம் என்பதை தாண்டி மக்களிடம் அதிக நன்மதிப்பையும் அதீத நம்பிக்கையையும் பெற்றுள்ள டாடா குழுமத்தின் தலைவராக ஒரு தமிழர் இருக்கிறார் என்றால், அது ஒவ்வொரு தமிழருக்கும் பெருமை.
டாடா நிறுவன முன்னாள் தலைவர் ரத்தன் டாடாவின் நம்பிக்கைக்கும் நன் மதிப்புக்கும் பாத்திரமான நடராஜன் சந்திர சேகரன், டாடாவை மட்டுமில்லை இந்தியாவையே பொருளாதாரத்தில் முன்னேற்றிக் கொண்டிருக்கிறார் என்றால் மிகையில்லை.