ஒடிசா மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி, பூரி கோயில் கருவூலம் தொடர்பான நிகழ்வுகளைப் பார்த்து ஒடிசா மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். பூரி ஜெகந்நாதர் கோயிலின் கருவூல அறையின் சாவி தமிழகத்துக்குச் சென்று விட்டதாக மக்கள் கூறுகின்றனர். சாவியைத் தமிழகத்துக்கு அனுப்பியவர்கள் யார்? கொண்டு போனவர்கள் யார் ? என்றும் கேள்வி எழுப்பியிருந்தார்.
ஒடிசாவின் ஆளும் பிஜு ஜனதா தளத்தில் சக்திமிக்க மனிதராக உருவெடுத்துள்ள முதல்வர் நவீன் பட்நாயக் க்கு மிகவும் நெருக்கமான முன்னாள் IAS அதிகாரியுமான தமிழகத்தைச் சேர்ந்த விகே பாண்டியனைத் தான் பிரதமர் மோடி மறைமுகமாக குறிப்பிட்டார் என்று ஊடகங்கள் எழுத தொடங்கின.
ஒடிசா முதல்வர், தமிழக முதல்வர் உட்பட பலர் பிரதமரின் பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், பூரி ஜெகன்னாதர் கோயில் பொக்கிஷ அறையின் காணாமல் போன சாவி குறித்த விவாதம் மீண்டும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
என்ன தான் நடக்கிறது அந்த கோயிலில்? கோயில் பொக்கிஷ அறையில் என்னஎன்ன நகைகள் உள்ளது ? உண்மையில் அந்த அறையின் சாவி எங்கே?
அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு…
ஒடிசாவின் கிழக்கு கடற்கரையில் பூரி மாவட்டத்தில் உலகப் புகழ்ப் பெற்ற பூரி ஜெகந்நாதர் கோயில் அமைந்திருக்கிறது.
இந்த கோயில், 12ம் நூற்றாண்டில் தமிழகத்தைச் சேர்ந்த சோழ மன்னன் அனந்த வர்மன் சோதங்க தேவனால் கட்டப்பட்டது. ஸ்ரீ கிருஷ்ணர், பலராமர், சுபத்ரை ஆகியோர் தெய்வங்களாக இக்கோயிலில் பூஜிக்கப்படுகிறார்கள்.
இந்தத் தெய்வங்களுக்கு பல ஆண்டுகளாக பல மன்னர்கள் பல்வேறு தரப்பட்ட தங்க, வெள்ளி நகைகளையும் மற்றும் விலை உயர்ந்த ரத்ன கற்களையும் தானமாக கொடுத்துள்ளனர்.
பூரி ஜெகந்நாதர் மீது தீராத அன்பு கொண்ட பக்தர்களும் பல்வேறு நகைகளைத் தானமாக கொடுத்துள்ளனர்.
இவை அனைத்தும், இக்கோயிலில் உள்ள ரத்ன கருவூலம் எனப்படும் பொக்கிஷ அறையில் பாதுகாக்கப்பட்டுவந்தன. இந்த ரத்ன கருவூலம் இரண்டு அறைகளைக் கொண்டது. ஒன்று வெளியறை மற்றொன்று உள் அறை .
ஒவ்வொரு மூன்று ஆண்டுக்கும் ஒரு முறை, கோயிலில் உள்ள தங்கம், வெள்ளி உட்பட சுவாமியின் நகைகள் மற்றும் பிற ஆபரணங்களைக் கணக்கெடுக்க வேண்டும் என்று 1958ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட ஸ்ரீ ஜெகன்னாத் கோயில் சட்ட விதி சொல்கிறது .
ஆவணங்களின் படி பார்த்தால் 1978ம் ஆண்டு தான் கடைசி முறையாக பூரி ஜெகன்னாத் கோயிலில் உள்ள ரத்ன பண்டாரி எனப்படும் ‘ரத்ன கருவூலம்’ திறக்கப்பட்டுக் கணக்கெடுக்கப் பட்டிருக்கிறது. அப்போதும் கோயிலின் நகைகள் கணக்கெடுக்கப்படவில்லை.
46 ஆண்டுகளுக்கு முன், இந்த கருவூலத்தில் 100 கிலோவுக்கு மேலான தங்கம், 200 கிலோவுக்கு மேலான வெள்ளி மற்றும் ஏராளமான தங்க, வெள்ளி நகைகள், சிகப்புத் துணியில் கட்டப்பட்டு மரப்பெட்டிகளில் சேமித்து வைக்கப்பட்டிருந்தன எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவை தவிர, கோயில் நித்திய பூஜைகள் ,சடங்குகளில் கணிசமான அளவு தங்க, வெள்ளி நகைகள் பயன்படுத்தப்படுகின்றன.
இதற்கிடையில் , கடந்த 2018ஆம் ஆண்டு ஒடிசா சட்டமன்றத்தில் இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த , மாநில சட்ட அமைச்சர் பிரதாப் ஜெனா , 1978 ஆம் ஆண்டு கணக்குப் படி, 12,831 பரி தங்க நகைகளும் , 22,153 பரி வெள்ளி நகைகளும் உள்ளதாக தெரிவித்திருந்தார். ஒரு பரி என்பது 11.66 கிராமாகும் . அதாவது , 149.609 கிலோ தங்க நகைகளும், 258 கிலோ வெள்ளி பொருளும் இருந்ததாக தெரிய வருகிறது.
இதன் பிறகு தான் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, கருவூலத்தில் உள் அறையைத் திறக்க அந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முயற்சி மேற்கொள்ளப் பட்டது.
இரண்டு அறைகள் உள்ள இந்த ரத்ன கருவூலத்தைத் திறப்பதற்கு, ஒடிசா மாநில அரசு 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஒரு முயற்சியை மேற்கொண்டது. அதன்படி, இந்திய தொல்லியல் துறை சார்ந்த அறிஞர்கள் உட்பட 16 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டது.
ரத்ன கருவூலத்தின் வெளி அறையை மட்டுமே அவர்களால் திறந்து ஆய்வு செய்ய முடிந்தது. தங்கம், வெள்ளி நகைகள் உட்பட சுவாமியின் பிற ஆபரணங்கள் பாதுகாக்கப் படும் ரத்ன கருவூலத்தில் உள்ளறையின் சாவி கிடைக்கவில்லை என்பதால் அந்த முக்கியமான அறையை ஆய்வுக் குழுவினரால் திறக்க முடியவில்லை.
மாற்று சாவி மாவட்ட ஆட்சியரிடம் தான் இருக்கவேண்டும் என்பதால், நீதிமன்ற விசாரணை நடத்தியதில் , மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ரத்ன கருவூல உள் அறையின் மாற்று சாவி என எழுதப்பட்ட ஒரு கவர் மட்டும் கிடைத்ததாக என மாவட்ட ஆட்சியர் அறிவித்தார்.
தொலைந்த சாவியைத் தேடிக் கண்டுப்பிடிக்க நீதித்துறை அமைத்த ஆணையமும் 300 பக்க அறிக்கையைச் சமர்ப்பித்து விட்டது. ஆனாலும் ரத்ன கருவூலத்தின் சாவி என்ன ஆனது என்று சொல்லும் ஆணையத்தின் இறுதி அறிக்கையை இன்னமும் ஒடிசா மாநில அரசு, சட்டமன்றத்தில் தாக்கல் செய்யாமல் வைத்திருக்கிறது.
இதைத் தொடர்ந்து, ஒடிசா மாநில முன்னாள் பாஜக தலைவர் சமீர் மொகந்தி ஒடிசா உயர்நீதிமன்றத்தில் , மீண்டும் ரத்ன கருவூலத்தைத் திறக்க வேண்டும் என்றும், கருவூலத்தின் இரண்டாவது சாவி என்ன ஆனது? என்பது பற்றி சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.
இந்த விசாரணையில், மீண்டும் பூரி ஸ்ரீ ஜெகன்னாதர் கோயிலின் ரத்ன கருவூலத்தைத் திறந்து ஆய்வு செய்ய ஒடிசா உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவு மேலும் பரபரப்பைக் கூட்டியது.
ஆண்டுதோறும் ஆடி மாதம் நடத்தப் படும் பிரம்மாண்ட ரத யாத்திரையின் போது ராஜராஜேஸ்வர அலங்காரமாக சுனா பேஷா என்ற பெயரில், தெய்வங்களுக்கு அலங்காரம் செய்யப்படுகிறது. இதற்காக பொக்கிஷ அறையில் இருந்து சுவாமிக்கு கவசங்கள் அணிவிப்பது வழக்கம். வழக்கமாக 138 வகையான ஆபரணங்கள் சார்த்தும் நிலை மாறி இப்போதெல்லாம் 35 வகையான ஆபரணங்களே அணிவிக்கப்படுகிறது என்று கூறப்படுகிறது.
இந்த பின்னணியில் தான் தேர்தல் பிரச்சாரத்தில் இந்த கருவூலத்தின் சாவி யாரிடம் உள்ளது என்று மக்கள் கேட்பதாக பிரதமர் மோடி கேள்வி எழுப்பி இருக்கிறார்.