யூடியூபர் சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை ரத்து செய்யக்கோரி அவரது தாயார் கமலா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
தேனி மாவட்டத்தில் தங்கியிருந்த பிரபல யூடியுபர் சவுக்கு சங்கர் கஞ்சா வைத்திருந்ததாக போலீசார் கைது செய்தனர். அவரை 2 நாள் காவலில் எடுத்து விசாரித்த போலீசார், நேற்று மீண்டும் மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது, சவுக்கு சங்கருக்கு, ஜூன் 5ஆம் தேதிவரை நீதிமன்ற காவலை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டதை அடுத்து, மீண்டும் கோவை மத்திய சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
இந்தநிலையில், சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை ரத்து செய்யக்கோரி அவரது தாயார் கமலா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் தனது மகன் செயல்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க பிறப்பித்த உத்தரவு தொடர்பான அனைத்து அசல் ஆவணங்களையும் இன்று பிற்பகலுக்குள் தாக்க செய்ய காவல் ஆணையருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தவிட்டுள்ளது.