தமிழகத்து பெண் தெய்வமான சக்தி பண்ணாரி மாரியம்மன் , கர்நாடக மலைப் பகுதியின் எல்லை தெய்வமாகவும் திகழ்கிறாள். சத்திய மங்கலம் புலிகள் காப்பகம் வனப்பகுதிக்கு மிக அருகில் அமைந்திருக்கும் இந்த சக்தி பண்ணாரி மாரியம்மன் கோயிலைப் பற்றி இன்றைய கோயில் அறிவோம் பகுதியில் பார்ப்போம்.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில் இருந்து மைசூரு செல்லும் வழியில் பண்ணாரி அம்மன் கோயில் அமைந்துள்ளது. அழகிய கோபுரத்துடன் அர்த்த மண்டபம் என விளங்கும் பண்ணாரி அம்மன் கோயிலில் வேங்கைமரம் தலமரமாக அமைந்துள்ளது.
300 ஆண்டுகளுக்கு முன்னொரு காலத்தில் இந்த வனப்பகுதியின் உள்ளே,காட்டாறு ஓடும் தோரண பள்ளம் என்ற இடத்துக்கு அருகே, கால்நடைகளை மேய்ச்சலுக்கு மக்கள் கூட்டி வருவது வழக்கம் .
அப்போது நடந்த ஒரு அற்புதம் தான் இந்த பண்ணாரி அம்மன் கோயில் உருவான வரலாறு .
தினமும் ஒரு காரம் பசு மட்டும் , தனியாக சென்று மேய்ந்து விட்டு வருவதைப் பார்த்த மேய்ச்ச்சல் காரன், காரம் பசுவை பின்தொடர்ந்து சென்று பார்த்தான்.
அங்கே ஒரு வேங்கை மரத்தின் அடியில் புற்கள் சூழ்ந்த இடத்தில் தன்னிச்சையாக பால் சொரிந்ததைக் கண்டான் .
ஊர்மக்கள் அந்த இடத்தை சுத்தம் செய்து பார்த்த போது ஒரு சுயம்பு லிங்கம் வேங்கை மரத்தடியில் இருப்பதைக் கண்டார்கள்.
வழிப்போக்கர்களுக்கு துணையாக கேரளாவில் இருந்து வந்ததாகவும்,இங்கே தங்கி விட்டதாகவும்,இனி பண்ணாரி அம்மன் என வழிபட்டு நலம் பெறுங்கள் என்றும்,அருள் வாக்கு கேட்டது.
ஆரம்பத்தில் ஒரு சிறு குடிலில் அம்மனை வணங்கி வந்தனர். இந்த கோயிலுக்கு இன்னொரு வரலாறும் சொல்லப்படுகிறது .
அதாவது, ஒரு காலத்தில் சலவைத் தொழில் செய்யும் தம்பதியர், அந்த பெரிய மலையின் கீழ் ஓடுகின்ற ஆற்றுப்பகுதிக்கு, சலவைத் துணிகளை எடுத்துச் செல்வது வழக்கம்.
நிறைமாத கர்ப்பினியான அந்த சலவைத் தொழிலாளியின் மனைவிக்குத் திடீரென்று பிரசவ வலி ஏற்பட்டது. மலைப்பகுதியில் பெரும் மழை பெய்துக் கொண்டிருந்தது. வேறு வழியில்லாமல், கணவரே பிரசவம் பார்த்து, அழகிய இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தன .
அவர்களால், ஒரு குழந்தையைத் தான் தூக்க முடிந்தது, இரண்டாவது குழந்தையைத் தூக்க முடியவில்லை. இரண்டாவது குழந்தையை அங்கேயே ஒரு தாழியில் வைத்து விட்டு ஊருக்குத் திரும்பி , ஊர் தலைவரிடம் நடந்ததை கூறினார்கள்.
எல்லோரும் சேர்ந்தும் குழந்தையைத் தூக்க முடியாததால், கடப்பாறையைக் கொண்டு தாழியை உடைக்க முற்பட்டனர். கடப்பாரை குழந்தையின் வலது மார்பில் பட்டு ரத்தம் வந்தது.
இன்றும் அம்மையின் வலது மார்பில் அந்த காயத்தின் அடையாளம் கூர்ந்துப் பார்த்தால் , தெரிகிறது என்கிறார்கள்.
பிறகு மறுநாள், தாழியில் இருந்த குழந்தை அம்மை வடிவாக எழுந்தருளி தனக்கு திருவிழா நடத்த சொன்னதால், ஊர் மக்களும் திருவிழாவுக்கு ஏற்பாடு செய்தனர்.
கொங்கு நாட்டு வழக்கப் படி, அனைவரும் பச்சை மாவு எடுத்துக்கொண்டு வடக்குத் திசையில் பண்ணாரி அம்மன் சென்றனர் . ஏழை சலவைத் தொழிலாளியின் மனைவி மட்டும், வறுமையின் காரணமாக, பச்சை மாவுக்குப் பதிலாக , புளியங் கொட்டையை இடித்து மாவு செய்து, தெற்கு திசை நோக்கி சென்றிந்தாள்.
புளிமாவுக்காக அம்மனே , வடக்கிலிருந்து, தெற்கு நோக்கி திரும்பி காட்சியளித்தாள் என்றும், அதனால் தான் இன்றும் அம்மன் அப்படியே காட்சியளிக்கிறாள் என்றும் கூறப்படுகிறது.
சுயம்புவாக தோன்றிருப்பதால், இக்கோயிலில் புற்றுமண் தான் பிரசாதமாக வழங்கப் படுகிறது.
இக்கோயிலின் சிறப்பு அக்னிக்குண்டம் இறங்குதல் தான். பக்தர்கள் காடுகளுக்குச் சென்று மரம் வெட்டி எடுத்துவந்து அடுக்கி 8 ஆதி நீளத்தில் அக்கினி குண்டம் அமைக்கிறார்கள் . தலைமை பூசாரி முதலில் இறங்கி நடக்க,பின்பு லட்சக்கணக்கான பக்தர்கள் அக்னிக் குண்டத்தில் இறங்குகிறார்கள்.
பிரம்மாண்டமான இந்த கோயிலின் அக்னிக் குண்டத் திருவிழா பார்க்கவே மெய் சிலிர்க்க வைக்கும்.
ஒவ்வொரு ஆண்டு இக்கோயிலில் நடக்கும் பங்குனி மாத குண்டத் திருவிழாவுக்கு 5 லட்சத்துக்கும் மேலான பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள்.
வாரத்தின் செவ்வாய்,வெள்ளிக் கிழமைகளில், அமாவாசை தினங்களில் பக்தர்கள் இக்கோயிலுக்கு வந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டு நலம் பெறுகிறார்கள்.
நேர்த்திக்கடனாக , கண், கை, கால் போன்ற உருவத் தகடுகள் வாங்கி அர்ச்சனை செய்து கோயிலில் உண்டியலில் செலுத்தி வழிபட்டால் நினைத்தது நடக்கும் என்ற நம்பிக்கை பக்தர்களிடம் இருக்கிறது.