காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோயில் வைகாசித் திருவிழாவையொட்டி நடைபெற்ற தேரோட்டத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற வரதராஜ பெருமாள் கோயிலில் வைகாசித் திருவிழா கடந்த 20-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினசரி காலை மாலை வேளைகளில் அலங்கரிக்கப்பட்ட தேரில் பெருமாள் வீதியுலா வந்தார்.
இந்நிலையில் விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. இந்த திருத்தேரில் பெருமாளின் ஒன்பது அவதாரங்களும் மர சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளன.
வரதராஜ பெருமாள் கோயில் தேரோட்டத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்து வழிபட்டனர்.
இதனையடுத்து திருத்தேரோட்டத்தில் பங்கேற்ற தமிழக அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், செஞ்சி மஸ்தான் ஆகியோர் தேரை வடம்பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர்.