குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள குழந்தைகள் விளையாட்டு மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 27 பேர் உயிரிழந்தனர்.
குஜராத் மாநிலம் ராஜ்கோட் நகரில் உள்ள வணிக வளாகப் பகுதியில் சிறுவர்களுக்கென பிரத்யேக விளையாட்டு மையம் செயல்பட்டு வந்தது.
இந்த விளையாட்டு மையத்தில் நேற்று மாலை திடீரென தீப்பிடித்தது. கோடை விடுமுறையை ஒட்டி, அந்த விளையாட்டு மையத்தில் ஏராளமான சிறுவர், சிறுமியர் வந்திருந்ததால், பலர் தீயில் சிக்கிக்கொண்டனர். நீண்ட நேர போராட்டத்திற்குப் பின் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்த விபத்தில் 9 குழந்தைகள் உட்பட 27 பேர் உயிரிழந்தனர்.
காயமடைந்த பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து தொடர்பாக சம்பந்தப்பட்ட விளையாட்டு மையத்தின் உரிமையாளர் மற்றும் மேலாளர் கைது செய்யப்பட்டனர். மேலும் ஒருவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
இந்த விபத்து குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. சம்பவம் நடைபெற்ற இடத்தில், குஜராத் முதலமைச்சர் பூபேந்திர படேல், மாநில உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.
இதனைத் தொடர்ந்து, மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவர்களை சந்தித்து முதலமைச்சர் பூபேந்திர படேல் ஆறுதல் கூறினார்.