வங்கக்கடலில் நிலை கொண்டு உள்ள ரீமால் புயல் தீவிர புயலாக வலுவடைந்தது.
வடக்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ரீமால் புயல் கடந்த 6 மணி நேரத்தில், மணிக்கு 6 கிலோமீட்டர் வேகத்தில் வடக்கு நோக்கி நகர்ந்து இன்று காலை 5.30 மணி அளவில் தீவிர புயலாக வலுவடைந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்ந்து வடக்கு நோக்கி நகர்ந்து, மேலும் தீவிரமடைந்து வங்கதேசம் மற்றும் மேற்கு வங்க கடற்கரையை ஒட்டிய சாகர் தீவு மற்றும் கெபுபாரா இடையே, இன்று நள்ளிரவு தீவிரப் புயலாக கரையைக் கடக்க வாய்ப்பு உள்ளதாகவும், இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த தீவிர புயல் கரையைக் கடக்கும் பொழுது மணிக்கு 110 முதல் 120 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 135 கிலோ மீட்டர் வேகத்திலும் காற்று வீசக் கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
ரீமால் புயல் கரையைக் கடப்பதை ஒட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கொல்கத்தா விமான நிலையத்தில் இன்று நண்பகல் முதல் 21 மணி நேரத்திற்கு விமான சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.