தனியாரிடமிருந்து தொழில் நிறுவனங்கள் வாங்கும் மின்சாரத்திற்கு கூடுதல் வரி விதிக்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தனியாரிடமிருந்தும், வெளிச்சந்தையில் இருந்தும் மின்சாரத்தை வாங்கும் மின் வாரியத்துக்கு அதற்கான கட்டணம் மற்றும் வரியாக யூனிட்டுக்கு 1 ரூபாய் 94 காசுகள் செலுத்தப்படுகிறது. இதுவே அதிகம் என்று தொழிற்துறையினர் கூறிவரும் நிலையில், தற்போது மீண்டும் 34 காசுகள் வரி விதித்திருப்பது நியாயமல்ல என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்த கட்டண உயர்வால் பெருந்தொழில் நிறுவனங்கள் மூடப்படுவதையா தமிழக அரசு விரும்புகிறது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மின்வாரியத்தில் நடைபெறும் ஊழல்களை சரிசெய்யாமல், மின் கட்டணத்தை உயர்த்தும் தமிழக அரசின் செயல் கண்டிக்கத்தக்கது என்றும், எனவே, தனியாரிடமிருந்து தொழில் நிறுவனங்கள் வாங்கும் மின்சாரத்திற்கு கூடுதல் வரி விதிக்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.