வரும் 2026ம் ஆண்டுக்குள் வானில் 12000 சிறு செயற்கைக் கோள்களை விண்ணில் நிறுத்த எலான் மஸ்கின் ஸ்டார் லிங்க் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. செல்போன் டவரோ , பைபர் கேபிளே தேவைப்படாமல் எல்லா இடங்களிலும் தடையற்ற இணையத்தள சேவையைப் பெற முடியும் என SpaceX நிறுவனத் தலைவர் எலான் மஸ்க் தெரிவித்திருக்கிறார். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
பூமியின் கீழ் சுற்றுப்பாதையில் ஆயிரக்கணக்கான செயற்கைக் கோள்களை செலுத்தி, செயற்கைக் கோள் மூலமாக தடையற்ற, இணையத் தள சேவையை வழங்குவதற்காக எலான் மஸ்க் தொடங்கிய நிறுவனமே ஸ்டார் லிங்க்.
அமெரிக்கா,பிரிட்டன், நியூசிலாந்து , ஆஸ்திரேலியா, இந்தோனேசியா , ரஷ்யா,உக்ரைன், ஐரோப்பாவின் சில நாடுகள் என உலகின் 70 நாடுகளில் ஸ்டார் லிங்க் தனது செயற்கைக் கோள் இணையத் தள சேவையை வெற்றிக்கரமாக நடத்தி வருகிறது. இங்கிலாந்தில் 96 சதவீத குடும்பங்கள் சாட்டிலைட் இணைய சேவையைப் பெற்றுள்ளன. அதே போல், ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மற்றும் அமெரிக்காவில் 90 சதவீத குடும்பங்கள் இந்த சேவையை பெற்றுள்ளன.
2015ம் ஆண்டு ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட SpaceX-ன் திட்ட வரைவில், சுமார் 4,000 செயற்கைக்கோள்களை பூமியின் கீழ் சுற்றுப்பாதையில் நிறுத்தி, செயற்கைக்கோள் இணையச் சேவை வழங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன் தொடர்ச்சியாக, 2019ம் ஆண்டு, புளோரிடாவின் கேப் கனாவெரல் விமானப்படை நிலையத்தில் இருந்து வெற்றிகரமாக ஸ்பேஸ்எக்ஸின் முதல் 60 ஸ்டார்லிங்க் இணையத் தகவல் தொடர்பு செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப்பட்டன.
இப்போது, 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாத நிலவரப்படி, பூமியின் சுற்றுப்பாதையில், 800 கிலோ எடைக் கொண்ட சுமார் 5,874 ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்கள் உள்ளன என்றும், அவற்றில் 5,800 செயற்கை கோள்கள் செயல்பாட்டில் உள்ளன என்றும், தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒரு ஸ்டார்லிங்க் சிறு செயற்கைக்கோளின் ஆயுட்காலம் 5 ஆண்டுகளே. இந்நிலையில் கிட்டத்தட்ட 42,000 செயற்கைக்கோள்களை 2027ம் ஆண்டுக்குள், விண்ணில் நிறுத்த வேக வேகமாக செய்யப்பட்டு வருகிறது எலான் மஸ்கின் SpaceX நிறுவனம்.
ஸ்டார்லிங்க்கின் முதல் 60 சிறு செயற்கைக்கோள்கள் ஏவப்பட்ட சில நாட்களுக்குள், இந்த விண்கலங்கள் அதிகாலையில் வானில் முத்துச்சர விளக்குகளைப் போல பிரகாசமாக ஒளிவீசியது. இதன் கண்கொள்ளாக் காட்சியில் வானியல் விஞ்ஞானிகள் டெலஸ்கோப் இல்லாமலேயே கண்டுகளித்தனர்.
இந்தியாவில் இந்த சாட்டிலைட் இணையத்தளச் சேவைக்கு அனுமதி வழங்கினால், தொலைத்தொடர்பு துறையில் முன்னேற்றங்கள் நிகழும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் இந்த சேவையை வழங்கவேண்டுமானால், எலான் மஸ்க் மத்திய அரசிடமிருந்து சாட்காம் உரிமம் பெறவேண்டிய நிலையில் உள்ளார். தொலைதூர கிராமப்புற, மற்றும் மலைப் பிரதேசங்களில் இணையசேவை பெறுவதற்கு இது உதவும் என்றாலும், ஏற்கெனவே ஸ்டார்லிங் நிறுவனம் அமெரிக்க பாதுகாப்பு நிறுவனங்களுடன் தொடர்பில் இருக்கும் நிலையில், இந்திய அரசு தரவுகளின் பாதுகாப்பு குறித்த ஐயங்களை எழுப்பி இருக்கிறது.
இந்தியாவில் பயன்படுத்தப்படும் இயந்திரங்கள் அல்லது உபகரணங்கள் பற்றி அமெரிக்காவுக்கு எந்த தகவலும் கொடுக்கக் கூடாது என்றும், இந்த சேவையை பெறும் இந்தியர்களின் எந்த தரவுகளும் நாட்டுக்கு வெளியே செல்லக்கூடாது என்றும் இந்திய அரசு கட்டுப்பாடுகளை முன் வைத்து, கொள்கை அடிப்படையில் சாட்டிலைட் இணைய சேவைக்கு ஒப்புக் கொண்டுள்ளதாக தெரியவருகிறது.
கடந்த சில மாதங்களாகவே , ரிலையன்ஸ் நிறுவனத்துடனும் எலான் மஸ்க் பேச்சு வார்த்தைகள் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே செயற்கைக்கோள்களை பூமியின் குறைந்த சுற்றுப்பாதையில் வைப்பது சிக்கல்களுக்கு வழிவகுக்கும் என்று உலக வானியல் விஞ்ஞானிகள் கவலை தெரிவித்துள்ளனர்.