முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்ட கேரள அரசு விண்ணப்பித்தது தொடர்பாக, டெல்லியில் இன்று நடைபெறவிருந்த மத்திய சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டு குழு கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
முல்லை பெரியாறு அணையை உடைத்துவிட்டு, புதிய அணை கட்டுவதற்கான ஆய்வு நடத்த மத்திய அரசிடம் கேரள அரசு அனுமதி கோரியுள்ளது.
இதற்கு தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளும், விவசாய சங்கங்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
கேரள அரசின் மனுவை ஆய்வு செய்வது தொடர்பாக, மத்திய சுற்றுச்சூழல்,வனம், காலநிலை மாற்ற அமைச்சகத்தின்கீழ் உள்ள நிபுணர் மதிப்பீட்டு குழு கூட்டம் இன்று நடைபெறுமென அறிவிக்கப்பட்டது. இதற்குக் கண்டனம் தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசுக்குக் கடிதம் எழுதினார்.
இந்நிலையில், டெல்லியில் இன்று நடைபெறவிருந்த மத்திய சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டு குழு கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு முன்னதாக இக்கூட்டம் நடைபெற வாய்ப்பில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது.