திண்டுக்கல் உள்ளாட்சி நிதி தணிக்கைத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய சோதனையில் கணக்கில் வராத 2 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ளாட்சி நிதி தணிக்கைத்துறை உதவி இயக்குநர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
இந்த அலுவலகத்தில் வருடாந்திர கணக்குகளை ஆய்வு செய்த தணிக்கை குழுவினருக்கு கிராம ஊராட்சி செயலாளர்கள் லஞ்சம் கொடுப்பதாக திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனடிப்படையில், துணை கண்காணிப்பாளர் நாகராஜன் தலைமையில் 20 பேர் கொண்ட குழுவினர் சோதனை மேற்கொண்டனர். 4 மணி நேர சோதனைக்கு பிறகு கணக்கில் வராத 2 லட்சம் ரூபாயை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்.