தமிழகத்தில் தொழில் நிறுவனங்களின் வளர்ச்சியை திமுக அரசு நசுக்கி வருவதாக, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மின் கட்டண உயர்வு, நிலைக் கட்டண உயர்வு, உச்ச நேர மின் கட்டணம் போன்ற பல கட்டண உயர்வுகளால் தி.மு.க. அரசு தொழில் முனைவோரை வஞ்சித்து வருவதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றும் விதமாக, வெளிச் சந்தையில் இருந்து மின்சாரம் பெற்று வரும் தொழில் துறையினருக்கு, மேல்வரி விதிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக செய்தி அதிர்ச்சி அளித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
மேலும், தி.மு.க. அரசின் இந்த மேல் வரி நடவடிக்கை என்பது தொழில் துறையை நசுக்குவதற்குச் சமம் என்றும் ஓபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
திமுக அரசின் இந்த நடவடிக்கையால் தொழில் துறை நலிந்துவிடுவது மட்டுமல்லாமல், தொழிலாளர்களுக்கும் வேலை பறிபோகும் சூழ்நிலை உருவாகும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
எனவே மின்சாரத்தை வெளிச் சந்தையிலிருந்து பெறும் நிறுவனங்களுக்கு, மேல்வரி விதிப்பதை தமிழக அரசு கைவிட வேண்டுமெனவும் ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தினார்.