டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் இடைக்கால ஜாமீனை நீட்டிக்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு புகாரில் கைதான முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த 10-ஆம் தேதி இடைக்கால ஜாமீனில் வெளியே வந்தார்.
ஜூன் 1-ஆம் தேதியுடன் அவரது ஜாமீன் நிறைவுக்கு வருவதால், தமது உடல்நிலைக் குறைபாட்டைக் காரணம் காட்டி மேலும் ஒரு வாரம் ஜாமீன் நீட்டிக்க கோரி, உச்சநீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதிகள் ஜெ.கே. மகேஸ்வரி, கே.வி. விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய விடுமுறைக்கால அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு, இந்த வழக்கை அவசர வழக்காக நாளைக்கே பட்டியலிடுமாறு அவரது தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி வாதிட்டார்.
இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், இந்த விவகாரத்தை தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வுக்குப் பரிந்துரை செய்தனர்.