ஜம்மு காஷ்மீரில் 370-வது சட்டப்பிரிவு நீக்கப்பட்டதன் மூலம் பொதுமக்களிடம் ஒற்றுமை உணர்வு ஏற்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்துள்ள பிரத்யேக பேட்டியில், 370வது சட்டப்பிரிவு மக்களுக்கானது அல்ல என்றும் மாறாக நான்கைந்து குடும்பங்களின் செயல்திட்டம் என தெரிவித்தார். நாடாளுமன்ற தேர்தலில் காஷ்மீரில் பதிவான வாக்குகள் உலகிற்கு புதிய செய்தியை அனுப்பியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
ஸ்ரீநகரில் 38.49 சதவீத வாக்குகளும், பாரமுல்லாவில் 59.1 சதவீதமும், அனந்த்நாக்-ராஜோரியில் 51.35 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். 370வது சட்டப்பிரிவு நீக்கப்பட்டதன் மூலம் பொதுமக்களிடம் ஒற்றுமை உணர்வு ஏற்பட்டுள்ளதாகவும், இது தேர்தல், சுற்றுலா உள்ளிட்ட துறைகளில் எதிரொலித்தாக கூறினார்.
சில அரிய சமயங்களில் இணையத்தை முடக்க வேண்டியிருந்ததாகவும், ஆனால் தற்போது இணையம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் கிடைத்து வருவதாகவும் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.