ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகமை உதவியுடன் வெள்ளக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள சென்னை மாநகராட்சி முடிவெடுத்துள்ளது.
வடகிழக்கு பருவமழையின்போது, சென்னை பள்ளிக்கரணை மற்றும் புறநகர் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து பெரும் பாதிப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகாக ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகமையுடன் இணைந்து புதிய திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. அதன்படி, தமிழக அதிகாரிகளுக்கு ஜப்பானில் 2 கட்டங்களாக பயிற்சி அளிக்கப்பட்டது.
இதில், நிலத்தடி சுரங்கங்கள், சைஃபோன் குழாய்கள், நீர் படுகைகளை விரிவுபடுத்துதல் உள்ளிட்ட ஜப்பானின் திட்டங்கள் சென்னையில் செயல்படுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் ஜுன் மாதம் சென்னை வரும் ஜப்பான் அரசு அதிகாரிகளோடு கூட்டம் நடைபெற உள்ளதாகவும் ஆகஸ்ட் மாத இறுதிக்குள் விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்க உள்ளதாகவும் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.