திருச்சியில் ஆவின் பால் விநியோகம் செய்யும் வாடகை வாகன ஓட்டுநர்களுடன் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் தற்காலிகமாக போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டம், கொட்டப்பட்டு பகுதியில் உள்ள ஆவின் நிறுவனத்தில் இருந்து கரூர், பெரம்பலூர், அரியலூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட முகவர்களுக்கு தினமும் ஒரு லட்சத்து 20 ஆயிரம் லிட்டர் பாக்கெட் பால் விநியோகம் செய்யப்படுகிறது.
இந்த பாக்கெட் பால்கள் ஒப்பந்த அடிப்படையில் 42 சரக்கு வேன் மூலம் முகவர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. கடந்த ஓராண்டாக சரக்கு வாகனங்களுக்கு தர வேண்டிய வாடகை தொகையில் 2 மாதம் ஆவின் நிர்வாகம் நிலுவையில் வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நிலுவையில் உள்ள வாடகையை தரக்கோரி கொட்டப்பட்டு பகுதியில் உள்ள ஆவின் நிறுவனத்தின் முன்பு பால் வாகன ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக திருச்சி, பெரம்பலூர், அரியலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஆவின் பால் விநியோகம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து பால் வாகன உரிமையாளர்களுடன் ஆவின் நிர்வாகத்தினர் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் வேலைநிறுத்தப் போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக பால் வாகன உரிமையாளர்கள் தெரிவித்தனர்.