நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே 30 அடி கிணற்றிற்குள் விழுந்த குட்டி யானையை மீட்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில், உணவு மற்றும் குடிநீர் தேடி உலா வரும் காட்டு யானைகள் சில சமயங்களில், மின்சாரம் தாக்கி உயிரிழப்பதும், சகதிக்குள் சிக்குவதும் தொடர் கதையாக இருந்து வருகிறது.
இந்நிலையில், கொளப்பள்ளி குறிஞ்சி நகர் பகுதியில் நேற்று உலா வந்த குட்டி யானை ஒன்று, அங்கிருந்த கிணற்றுக்குள் தவறி விழுந்தது. இதனைக் கண்டு, தாய் யானையும், பிற யானைகளும் பிளிறின.
குட்டியைக் காப்பாற்ற முடியாமல் இரவு முழுவதும் யானைகள் பிளிறியதால், கிராம மக்கள் அச்சமடைந்தனர். விடிந்ததும், யானைகள் கிணற்றைச் சுற்றி நிற்பதைக் கண்ட பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், ஜேசிபி உதவியுடன் குட்டி யானையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர் .