உலக அளவில் நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு மரண தண்டனைகள் அதிகரித்துள்ளதாக மனித உரிமைகள் அமைப்பான Amnesty International, தெரிவித்துள்ளது. புள்ளி விவரங்களுடன் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கையில் பல அதிர்ச்சித் தகவல்களும் இருக்கின்றன. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு
மனித உரிமைகளுக்காக இரண்டு முறை நோபல் பரிசு பெற்ற Amnesty International லண்டனைத் தலைமையகமாக கொண்டு இயங்கி வருகிறது.
உலக அளவில் மரண தண்டனைகள் குறித்து ஆண்டுதோறும் அறிக்கை வெளியிட்டு வருகிறது Amnesty International. தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில், 2023 ஆம் ஆண்டில் உலகளவில் மரணதண்டனைகளின் எண்ணிக்கை கடந்த 8 ஆண்டுகளில் அதிகரித்திருக்கிறது என்றும், அதிலும் சில மத்திய கிழக்கு நாடுகளில்தான் மரண தண்டனை அதிகம் வழங்கப் படுகிறது என்றும் தெரிவித்துள்ளது.
16 நாடுகளில் மொத்தம் 1,153 பேர் மரண தண்டனை மூலம் கொல்லப்பட்டதாக சொல்லும் இந்த அறிக்கை, இது 2022ம் ஆண்டை விட 30 சதவீதம் என்றும் கூறியிருக்கிறது. அதிகம் மரணதண்டனை கொடுத்த நாடுகளில் ஈரானே முதலிடத்தில் உள்ளது.
ஈரானில் கடந்த ஆண்டு 853 மரண தண்டனை கொடுக்கப் பட்டுள்ளது. அதே ஈரானில் 2022ஆம் ஆண்டில் 576 பேர்களுக்கும், 2021ம் ஆண்டில் 314 பேர்களுக்கும் மரண தண்டனை தரப்பட்டுள்ளது. ஆண்டுக்கு ஆண்டு ஈரானில் மரண தண்டனை எண்ணிக்கை கூடி வருவதையே இந்த தகவல் எடுத்துக் காட்டுகிறது.
ஈரானில் கடந்த ஆண்டு கொடுத்த மரணதண்டனைகளில் முக்கால் வாசி நபர்கள் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக மரண தண்டனையைப் பெற்றார்கள் என்பது குறிப்பிடத் தக்கது.
போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்கு மரணதண்டனையை வழங்கும் ஈரான் அரசு, அதிலும் ஈரான் மக்கள் தொகையில் அதிகமாக வாழும் விளிம்பு நிலை சமூகத்தில் உள்ளவர்களையே குறிவைத்து இந்த கொடிய தண்டனை தரப்படுகின்றது என்றும் இந்த அறிக்கையில் தெரிய வந்துள்ளது.
இதற்கு நேர்மாறாக, போதைப்பொருள் குற்றங்களுக்கான மரண தண்டனையை பாகிஸ்தான் கடந்த ஆண்டு ரத்து செய்திருப்பதும், மலேசியாவில் கட்டாய மரண தண்டனை முற்றிலுமாக ரத்து செய்யப்பட்திருப்பதும் குறிப்பிடத் தக்கதாக உள்ளது. கானா நாடாளுமன்றத்தில் மரண தண்டனையை ரத்து செய்து சட்டம் கொண்டுவரப் பட்டது.
உலகில் நிறைவேற்றப் படும் மரண தண்டனைகளில் 15 சதவீதம் சவூதி அரேபியாவில் தான் தரப்படுகின்றன.
தலையைத் துண்டித்துக் கொல்லும் கொடூரத் மரண தண்டனைக்குப் பெயர்பெற்ற சவூதி அரேபியாவில் 172 பேருக்கு மரண தண்டனை தரப்பட்டுள்ளது என தெரிய வந்துள்ளது. 2022 ஆம் ஆண்டில் ஒரே நாளில் 81 பேருக்கு மரண தண்டனை சவூதி அரேபியாவில் நிறைவேற்றப்பட்டதையும் இந்த அறிக்கை சுட்டிக்காட்டி உள்ளது.
சட்டப் புத்தகத்தில் இன்றும் மரண தண்டனையை வைத்திருக்கும் ஒரே மேற்கத்திய வளர்ந்த நாடான அமெரிக்காவில், 2022 ஆம் ஆண்டில் 18 ஆக இருந்த மரண தண்டனையில் எண்ணிக்கை கடந்த ஆண்டு 24 ஆக உயர்ந்துள்ளது.
2023 ஆம் ஆண்டு ஜனவரியில் ,அமெரிக்காவில், நைட்ரஜன் வாயுவைப் பயன்படுத்தி நாட்டின் முதல் மரணதண்டனையை நிறைவேற்றியதையும் இந்த அறிக்கை சுட்டிக் காட்டியிருக்கிறது.
கடந்த ஆண்டு , முதல் முதலாக ஒரு பெண் குற்றவாளிக்கு மரண தண்டனை தந்து சாதனை படைத்திருக்கிறது சிங்கப்பூர்.
சீனா, ஈரான், சவூதி அரேபியா, சோமாலியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளே இந்த மரண தண்டனை பற்றிய அறிக்கையில் முதல் 5 இடங்களைப் பெற்றிருக்கிறது. சீனாவில் மரணதண்டனை பற்றிய தரவுகளைத் இந்த அறிக்கை தரவில்லை என்றாலும், சுமார் 1000 பேர்களுக்கும் மேல் மரண தண்டனையால் கொல்லப் பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
அதேபோல்,வட கொரியா மற்றும் வியட்நாம் பற்றிய புள்ளிவிவரங்களையும் எடுக்க முடிய வில்லை என்று Amnesty International அமைப்புத் தெரிவித்துள்ளது.