மக்களவை தேர்தல் பிரச்சாரம் முடிவடைந்திருக்கும் நிலையில் ,மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகத்தில் உள்ள திருமயம் கோட்டை பைரவர் திருக் கோயிலுக்கு வந்து வழிபாடு செய்திருக்கிறார். திருமயம் கோட்டை பைரவர் கோயிலின் சிறப்பு என்ன? என்பது பற்றி தற்போது பார்க்கலாம்.
புதுக்கோட்டையிலிருந்து சுமார் 18 கிலோமீட்டர் தொலைவில் திருமயம் என்னும் ஊர் அமைந்துள்ளது. திருமெய்யம் என்ற பெயரே காலப் போக்கில் திருமயம் என்று மாறியதாக சொல்லும் இவ்வூரில், சத்தியகிரீஸ்வரர் கோயிலும், சத்திய பெருமாள் கோயிலும் பிரசித்தி பெற்றவை. இந்த இரண்டு கோயில்களும் திருமயம் கோட்டையின் தெற்குப் பகுதியின் சுவரைப் பொதுவாக பகிர்ந்து கொள்கின்றன. மேலும் இந்த கோயில்களின் பின்புறச் சுவர் மலையே ஆகும்.
மலையைச் சுற்றி பிறகோயில்களும் இருக்கின்றன. அவற்றில் மிக முக்கியமான இரண்டு கோயில்களில் ஒன்று கோட்டை பைரவர் கோயில். மற்றொன்று கோட்டை முனீஸ்வரர் கோயில்.
கி.பி. 16-17 ஆம் நூற்றாண்டுகளில், சேதுபதி மன்னர்களால் 350 ஆண்டுகளுக்கு முன் 40 ஏக்கர் நிலப்பரப்பில் திருமயம் கோட்டை கட்டப்பட்டது. ஏழு வட்ட வடிவிலான மதில் சுவர்கள் ஒன்றுக்குள் ஒன்று வைத்து கட்டப்பட்ட இக்கோட்டையில் தற்போது நான்கு சுவர்கள் மட்டுமே மிஞ்சி இருக்கின்றன.
ஆங்கிலேயரை எதிர்த்து போரிட்ட வீரபாண்டிய கட்டபொம்மனின் சகோதரர் ஊமை துரை பெயரால் ஊமையன் கோட்டை என்றும், பத்மக கோட்டை என்றும் அழைக்கப்படுகிறது.
இக்கோட்டைக்கு வடக்கில், தெற்கில் மற்றும் கிழக்கில் மூன்று வாசல்கள் உள்ளன.முனீஸ்வரர் மற்றும் பைரவர் வடக்கு மற்றும் தெற்கு வாசலில் காவல் தெய்வங்களாக வணங்கப்படுகிறார்கள்.
இந்தக் கோட்டையைப் பாதுகாப்பதால் கோட்டை பைரவர் என்று அழைக்கப் படுகிறார். பொதுவாக சிவன் திருக்கோயில்களில் வடகிழக்கு அல்லது கிழக்கில், மேற்கு நோக்கி அமர்ந்த கோலத்தில் பைரவர் இருப்பார்.
ஆனால் இந்த கோட்டை பைரவர் வடக்கு நோக்கி இருக்கிறார். உலகத்தில் வடக்கு திசை பார்த்தபடி, தனி கோயிலாக அமைந்திருக்கும் பைரவர் கோயில் இது ஒன்றே ஆகும்.
மேலும், அவ்வழியே சாலையில் செல்லும் வாகனங்களுக்குப் பாதுகாப்பு தரும் கண்கண்ட தெய்வமாக இந்தக் கோட்டை பைரவர் விளங்குகிறார். மிகவும் சக்தி வாய்ந்த தெய்வமாக விளங்கும் கோட்டை பைரவருக்கு சிதறு காய் உடைத்து வேண்டினால், நினைத்தது நிறைவேறும் என்கிறார்கள்.
கோட்டை பைரவருக்கு பூசணிக்காய் தீபமேற்றியும், இலுப்பை எண்ணையில் விளக்கு ஏற்றியும், சிகப்பு துணியில் மிளகு விளக்கு ஏற்றியும், எள் சாதம் நைவேத்யம் படைத்தும் வழிபாடு செய்வது பழக்கமாக உள்ளது.
சந்தன அபிஷேகம் செய்தும், புனுகு சார்த்தியும் , சந்தன காப்பு மற்றும் வடைமாலை சாரதியும் செவிவரளி மாலை அணிவித்து, நெய் தீபம் ஏற்றியும் இக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் வழிபாடு செய்கிறார்கள். கண்திருஷ்டி போகவும் , பில்லி சூனிய பாதிப்பிலிருந்து தப்பிக்கவும்,தொழில் பிரச்சனை தீரவும் , திருமணத் தடை நீங்கவும் இன்றும் பலர் கோட்டை பைரவரை வணங்குகிறார்கள்.
செட்டிநாட்டு மண்டலத்தின் ஒரு பகுதியாக இருப்பதால் , இங்கே பைரவர் வழிபாடு ஒரு சிறப்பான அம்சமாகும். பொதுவாக அனைத்து தேய்பிறை அஷ்டமி நாட்களிலும் பூஜைகள் விமர்சையாக நடத்தப்பட்டாலும், மார்கழி தேய்பிறை அஷ்டமி , பைரவர் ஜென்மாஷ்டமி வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.