ஜெர்மனியிலிருந்து நாடு திரும்பிய கர்நாடக எம்பி பிரஜ்வல் ரேவண்ணா, பெங்களூரு விமான நிலையத்திலேயே நள்ளிரவில் கைது செய்யப்பட்டார்.
பாலியல் ரீதியாக பெண்களை துன்புறுத்தி, அவற்றை காணொலியாகப் பதிவு செய்திருப்பதாகப் புகார் எழுந்ததைத் தொடர்ந்து, பிரஜ்வல் ரேவண்ணா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இவ்வழக்கு தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக கர்நாடக அரசு சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்தது.
இதனிடையே கடந்த ஏப்ரல் 26-ம் தேதி பிரஜ்வல் ரேவண்ணா ஜெர்மனிக்கு தப்பியோடினார். பிரஜ்வல் உடனடியாக நாடு திரும்பி வழக்கை சட்டரீதியாக எதிர்கொள்ள வேண்டுமென முன்னாள் பிரதமர் தேவகவுடா உள்ளிட்டோர் கோரிக்கை விடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து, அண்மையில் வீடியோ ஒன்றை வெளியிட்ட பிரஜ்வல் ரேவண்ணா, மே 31-ம் தேதி காலை 10 மணிக்கு சிறப்பு புலனாய்வு பிரிவு போலீஸார் முன்னிலையில் நேரில் ஆஜராவதாகக் கூறினார்.
ஜெர்மனியின் முனிச் நகரத்திலிருந்து நள்ளிரவில் பெங்களூரு திரும்பிய பிரஜ்வல் ரேவண்ணாவை, கெம்பேகௌடா சர்வதேச விமான நிலையத்திலேயே வைத்து, சிறப்பு புலனாய்வுக் குழுவினர் கைது செய்தனர்.
முன்னதாக, பிரஜ்வல் ரேவண்ணா தரப்பில் முன் ஜாமீன் கோரி பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை அவசர வழக்காக ஏற்க நீதிமன்றம் மறுத்த நிலையில், இன்று விசாரணைக்கு வருகிறது.