குஜராத் மாநிலத்தில் மக்களவைத் தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், ஊடகங்களின் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில் அம்மாநிலத்தில் மொத்தமுள்ள 26 இடங்களிலும் பாஜக வெற்றி பெறும் என தெரியவந்துள்ளது.
குஜராத்தில் உள்ள 26 மக்களவை தொகுதிகளுக்கும் கடந்த மே 7-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. அம்மாநிலத்தின் சூரத் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. இதனையடுத்து அத்தொகுதியில் ஏற்கனவே பாஜகவின் வெற்றி உறுதியானது. இந்நிலையில் குஜராத் மாநிலத்தின் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பை ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.
அதன்படி, நியூஸ் 18 சேனல் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பின்படி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மொத்தமுள்ள 26 இடங்களிலும் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
TIMES NOW வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பிலும் குஜராத்தின் 26 இடங்களிலும், தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா டுடே சேனல் வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பின்படி தேசிய ஜனநாயக கூட்டணி அதிகபட்சமாக 25 முதல் 26 இடங்களிலும், இண்டியா கூட்டணி ஒரு இடத்திலும் வெல்ல வாய்ப்புள்ளது என கருத்துக் கணிப்பை வெளியிட்டுள்ளது.