ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சாதனை படைக்க காரணமாக இருந்தவர் என அந்த அணியின் ஆலோசகர் கவுதம் கம்பீர் போற்றப்படுகிறார். அதற்கான காரணம் என்ன? சாத்தியமானது எப்படி? என்பது பற்றி பார்க்கலாம்.
நடப்பு ஆண்டு ஐபிஎல் தொடரில் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. தொடர் முழுவதுமாக டாப் ஆப் தி டேபிளில் ஆதிக்கம் செலுத்திய கொல்கத்தா அணி, கடந்த தொடரில் 7வது இடத்தில் இருந்து தொடரை முடித்திருந்தது.
2023-ல் பிளே ஆப் சுற்றுக்கு கூட தகுதி பெறவில்லை, நடப்பு தொடரில் சாம்பியன் பட்டம் சாத்தியமானது எப்படி?
இது சாத்தியமானதற்கு காரணம் நடப்பு தொடரில் கே கே ஆர் அணியின் ஆலோசகராக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர் நியமிக்கப்பட்டது தான் என பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.
கொல்கத்தா அணியுடன் தான் விளையாடிய நாள் முதல் தற்போது வரை மிகுந்த பிணைப்பில் இருப்பவர் கௌதம் கம்பீர். தனது அனுபவம் மூலம் 2012ம் ஆண்டு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில், சென்னை அணியை சொந்த மண்ணில் வீழ்த்தி முதல் கோப்பையை வென்ற பெருமை அவருக்கு உண்டு.
எனவே தான், நடப்பு ஆண்டிற்கான கொல்கத்தா அணியின் ஆலோசகராக அவரை தேர்வு செய்யும் முனைப்பில், அந்த அணியின் நிர்வாகியான ஷாருக்கான் விருப்பம் தெரிவித்த நிலையில், அணியும் அதற்கான முன்னெடுப்புகளை செய்து அணியின் ஆலோசகராக கௌதம் கம்பீர் நியமிக்கப்பட்டார்.
நடப்பு தொடரின் முதல் லீக் போட்டி முதல், சன் ரைசர்ஸ் ஹைதராபாத், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ், டெல்லி கேபிடல்ஸ் என ஹாட்ரிக் வெற்றிகளை பதிவு செய்தது. சென்னை அணியிடம் 4 வது போட்டியில் தோல்வியடைந்த கே கே ஆர், அடுத்தடுத்து 2 வெற்றி, ஒரு தோல்வி என்ற விகிதத்தில் அதிரடி காட்டியதோடு, பிளே ஆப் சுற்றுக்குள் முதல் அணியாக தகுதி பெற்று அசத்தியது.
ஒருமுறை கௌதம் கம்பீருடன், ஏன் நீங்கள் எப்போதுமே விரைப்பான முக பாவனையுடன் வலம் வருகிறீர்கள் என கேட்டதற்கு, நான் சிரிப்பதை பார்ப்பதற்காக ரசிகர்கள் வருவதில்லை, வெல்வதை பார்க்க தான் வருகிறார்கள். நான் பொழுது போக்கு துறையில் இல்லை, பாலிவுட் நடிகரும் இல்லை. கிரிக்கெட் துறையில் இருக்கும் தாம் விதிகளுக்கு உட்பட்டு தம்மால் முடிந்த எல்லாவற்றையும் செய்த பின், டிரெஸ்ஸிங் ரூம் செல்லும் போது வெற்றியுடன் செல்ல வேண்டும் என்றுதான் நினைப்பேன் என்று அற்புதமான பதிலை கொடுத்தார்.
அவ்வப்போது கௌதம் கம்பீர் குறித்த சர்ச்சை பேச்சுகள் வரும் போதெல்லாம், தன்னால் அதற்கான பதிலடியாக என்ன கொடுக்க முடியுமோ அதை கொடுத்து, ரசிகர்கள் மத்தியில் புரிதலை கொண்டு வருவது அவரது நோக்கமாக இருந்தாலும், அதனை தான் செய்யும் பணியில் மையப்படுத்தி காட்டுவதையே அவர் விரும்புவார்.
அப்படி தான் ஷாருக்கான் மற்றும் கேகேஆர், தம் மீது வைத்திருந்த முழு நம்பிக்கையும் கருத்தில் கொண்டு, இறுதி வரை போராடி, தனது ஆலோசனையில் இந்த முறை 10 ஆண்டுகளுக்கு பிறகு கோப்பையை தட்டி தூக்க வைத்து விட்டார் கம்பீர். 2012 மற்றும் 2014 ஆகிய ஆண்டுகளில் கொல்கத்தா அணியின் கேப்டனாக இருந்த கம்பீர் எப்படி கோப்பையை வென்றாரோ, அதையே ஷாருக்கான் எதிர்பார்க்க, இந்த வருடம் அதே சென்னை சேப்பாக்கத்தில் 3 வது கோப்பையை ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையில் வென்றெடுக்க செய்து விட்டார் கம்பீர்.
இதனால் தான் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு, கௌதம் கம்பீர் பெயர் பலரால் பரிந்துரைக்க படுவதாகவும், ஆனால் மற்றொரு பக்கம் ஷாருக்கான், கம்பீர் தங்களது அணிக்கு மிகவும் தேவையான நபர் என்பதால், அவரை தொடர்ந்து ஆலோசகராக வைத்துக் கொள்ள விரும்புவதாகவும் தகவல்கள் வந்த வண்ணமே உள்ளது.
சிறந்த அனுபவசாலியான கௌதம் கம்பீர் 2011 உலக கோப்பை மற்றும் 2007 டி20 உலகக் கோப்பை தொடர்களில் விலையாடியவர். தொழில்முறை ஆட்டத்தை பொறுத்தவரை கௌதம் கம்பீர் இந்திய அணியின் தவிர்க்க முடியாத வீரராக இருந்தவர். அந்த அடிப்படையில் பிசிசிஐ அவரை தலைமை பயிற்சியாளர் பதவியில் தேர்வு செய்ய முனைப்பு காட்டுவதாக சொல்லப்படுகிறது.
ஒருபக்கம் பிசிசிஐ, ஒரு பக்கம் ஷாருக்கான் என ஒவ்வொருவரும் போட்டி போட காரணமான கம்பீர் கொடுத்துள்ள இந்த கம் பேக் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் மரியாதையையும், நம்பிக்கையும் கூட்டியிருக்கிறது. என்ன தான் ஆலோசகராக செயல்பட்டு ஐபிஎல் கோப்பையை வென்றெடுத்து கொடுத்தாலும், இந்த கம்பேக் கம்பீரின் தலைமையில் கே கே ஆர் சாம்பியன் பட்டம் வென்றிருப்பது போன்ற உணர்வை கொடுப்பதாகவே ரசிகர்கள் மகிழ்ச்சி கொள்கின்றனர்.