தமிழகத்தில் வெயில் வாட்டி வைத்து வந்த நிலையில், தென் மற்றும் உள் மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்துள்ளது.
தமிழகத்தில் தென்மேற்கு பருவ மழை தொடங்கிய நிலையில் நாமக்கல் மாவட்டம் செல்லப்பாகாலனி, வேட்டாம்பாடி, வகுரம்பட்டி, சேந்தமங்கலம், மோகனூர், புதன்சந்தை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று கனமழை பெய்தது. ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சுழல் நிலவியது.
இதே போல, ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில், பாரதி நகர், பட்டணம் காத்தான் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் லேசான மழை பெய்தது. அதேபோன்று, கடலாடி, கமுதி, முதுகுளத்தூர் உள்ளிட்ட மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் மழை பெய்தது. இதனால் குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே கன மழை காரணமாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் மக்கள் அவதியடைந்தனர்.வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான ஜனதாபுறம், செட்டியப்பணுர், அம்பலுர், கொடையாஞ்சி, ஆலங்காயம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 1 மணி நேரத்துக்கு மேலாக கனமழை பெய்தது.
இதன் காரணமாக சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஒடியது, இந்நிலையில் பாதுகாப்புக் கருதி பல்வேறு இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகினர்