மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறவுள்ளதால் தடையில்லா மின்சாரம் வழங்க மின்சார வாரியத்தை அறிவுறுத்தியுள்ளதாக சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் உள்ள வாக்கு என்னும் மையங்களில் பணிபுரிய உள்ள மேற்பார்வையாளர்கள், உதவியாளர்கள் மற்றும் நுண் பார்வையாளர்களை கணினி குழுக்கள் முறையில் தேர்வு செய்யும் பணி மாவட்ட தேர்தல் அலுவலர் ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னையில் உள்ள 3 வாக்கு எண்ணும் மையங்களிலும் ஆயிரத்து 550 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்தார். முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும் எனக் கூறிய அவர், தேர்தல் ஆணையத்தின் அனைத்து விதிமுறைகளும் முறையாக பின்பற்றப்படும் என குறிப்பிட்டார்.
நாளை மற்றும் நாளை மறுநாள் வரை 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரம் வழங்குவதை அனைத்து செயற் பொறியாளர்களும் உறுதி செய்யுமாறு மின்சார வாரியத்தை அறிவுறுத்தியதாக கூறினார்.
மேலும், துணை மின் நிலையங்களில் ஏதாவது குறைபாடுகள் இருப்பின் அதனை உடனடியாக சரி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.