சிக்கிம் மாநிலத்தில் ஆளும் சிக்கிம் கிரந்தாரி மோர்ச்சா கட்சி மீண்டும் அபார வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. தற்போதைய முதலமைச்சரும், சிக்கிம் கிரந்தாரி மோர்ச்சா கட்சியின் தலைவருமான பிரேம் சிங் தமாங் மீண்டும் முதலமைச்சராகிறார். அவர் சாதித்தது எப்படி? என்பது பற்றி பார்க்கலாம்.
மேற்கு சிக்கிமை சேர்ந்த பி.எஸ். கோலே என்று அழைக்கப்படும் பிரேம் சிங் தமாங், 1990 ஆண்டு முதல் சிக்கிம் அரசியல் களத்தில் தீவிரமாக செயல்பட்டு வந்தார். 1993 ஆம் ஆண்டில் சிக்கிம் ஜனநாயக முன்னணி கட்சியில் சேர்ந்தார்.
உடனடியாக, 1994 ஆம் ஆண்டு நடைபெற்ற சிக்கிம் சட்டமன்றத் தேர்தலில் சகுங் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அப்போதைய சிக்கிம் அமைச்சரவையில் கால்நடை வளர்ப்பு, திருச்சபை மற்றும் தொழில் துறையின் அமைச்சராக பணியாற்றினார். அடுத்தடுத்த இரண்டு அரசுகளிலும் அமைச்சராக பதவி வகித்த பிரேம் சிங் தமாங், கட்சிக்குள்ளேயே தொண்டர்களால் ஒரு புரட்சியாளராக பார்க்கப் பட்டார் .
காலப்போக்கில் சிக்கிம் ஜனநாயக முன்னணி கட்சியின் தலைவரும் ,முதலமைச்சருமான தலைவர் பவன் குமார் சாம்லிங்குடன் கருத்து வேறுபாடு ஏற்பட்ட து. அதைத் தொடர்ந்து முதலமைச்சர் பவன் குமார் சாமலிங்கையும், அவரது அரசின் மக்கள் விரோத கொள்கைகளையும் கடுமையாக விமர்சிக்கத் தொடங்கினார் பிரேம் சிங் தமாங்.
1914ம் ஆண்டு முதல் 1999 ஆண்டு வரை கால்நடை துறை அமைச்சராக இருந்த போது அரசு பணத்தைத் தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் தண்டனைக்குள்ளாகி கிட்டத்தட்ட ஓராண்டுக் காலம் சிறையில் இருந்தார்.
பவன் குமார் சாம்லிங்குடன் மோதல் முற்றிய நிலையில் , 2013 ஆம் ஆண்டு பிப்ரவரி 4ம் தேதி சிக்கிம் கிரந்திகாரி மோர்ச்சா என்ற பெயரில் கட்சி தொடங்கிய பிரேம் சிங் தமாங், 10 தொகுதிகளில் கட்சியை வெற்றிப் பெற வைத்தார்.
சிக்கிம் உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் குற்றமற்றவராக நிரூபித்து விடுதலையான பிரேம் சிங் தமாங், 2019ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், மொத்தமுள்ள 32 சட்டமன்றத் தொகுதிகளில், 17 தொகுதிகளைக் கைப்பற்றி சாம்லிங்கின் 25 ஆண்டு ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்தார்.
அந்தத் தேர்தலில் தாம் போட்டியிடா விட்டாலும், 2019ம் ஆண்டு மே 27ம் தேதி அன்று கேங்டோக்கில் உள்ள பால்ஜோர் ஸ்டேடியத்தில் நடந்த விழாவில் சிக்கிம் மாநிலத்தின் முதலமைச்சராக பதவியேற்றார். அதன் பிறகு போகிலோக் கம்ராங் தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் போட்டியிட்டு 84 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
இப்போது நடந்த தேர்தலில். ஒரு தொகுதியைத் தவிர மீதமுள்ள 31 தொகுதிகளையும் கைப்பற்றி அபார வெற்றியைப் பெற்று இரண்டாவது முறையாக சிக்கிம் முதலமைச்சராகி இருக்கிறார்.
சாமானியன் முதல்வர் என்று சொல்லப்படும் பிரேம் சிங் தமாங் , சாமானியனுக்கான ஆட்சி நடத்தி இருக்கிறார் என்பதையே இந்த தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன என அரசியல் பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இன்னொரு புறம் , சிக்கிம் மாநிலத்தில் உள்ள 32 சட்டமன்றத் தொகுதிகளிலும் போட்டியிட்ட சிக்கிம் ஜனநாயக முன்னணி ஒரே ஒரு இடத்தில் மட்டுமே வென்றது.
சிக்கிம் ஜனநாயக முன்னணியின் தலைவரும் , சிக்கிம் மாநிலத்தின் முன்னாள் முதல்வருமான பவன் குமார் சாம்லிங் , தான் போட்டியிட்ட இரு தொகுதிகளிலும் தோல்வியுற்றார்.
இந்த தேர்தலில், பவன் குமார் சாம்லிங் , தனது சொந்த ஊரான நாம்ச்சி மாவட்டத்தில் இருக்கும் போகிலோக் கம்ராங் தொகுதியில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட போஜ்ராஜ் ராயிடம் 3000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
மேலும், பவன் குமார் சாம்லிங் , தான் போட்டியிட்ட இன்னொரு தொகுதியான நம்செய்யங் தொகுதியிலும், 2256 வாக்கு வித்தியாசத்தில், சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சியின் ராஜு பாஸ் நெட்டிடம் தோல்வி அடைந்தார்.
1994 ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரை 5 முறை சிக்கிம் மாநிலத்தின் முதல்வராக இருந்துள்ள சாம்லிங் , கடந்த 39 ஆண்டுகளில், போட்டியிட்ட இரு தொகுதிகளிலும் படு தோல்வி அடைந்திருப்பது இதுவே முதல்முறையாகும்.
சிக்கிம் மாநிலத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தான் போட்டியிட்ட 12 தொகுதிகளும் நோட்டாவை விடவும் குறைவான வாக்குகளே பெற்றிருக்கிறது. நோட்டாவுக்கு 0.99 சதவீத வாக்குகள் கிடைத்த நிலையில், காங்கிரஸ் 0.31 சதவீத வாக்குகளே பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.