வாக்கு எண்ணும் மையத்தில் கெட்டுப்போன உணவை தேர்தல் அதிகாரிகள் வழங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 19-ம் தேதி முதல் ஜூன் ஒன்றாம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் வாக்கு எண்ணும் பணியில், அலுவலர்கள், உதவியாளர்கள், நுண்பார்வையாளர்கள் என 38 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்டோர் ஈடுபடுத்தப்படுள்ளனர்.
இந்நிலையில் மத்திய சென்னை தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரியில் நடந்து வருகிறது.
இந்த வாக்கு எண்ணும் மையத்தில் நுண்பார்வையாளர்கள் 113 பேர், வாக்கு எண்ணும் மேற்பார்வையாளர்கள் 119 பேர், வாக்கு எண்ணும் உதவியாளர்கள் 121 பேர், அலுவலக உதவியாளர்கள் 101 பேர் என மொத்தம் 454 பேர் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்கு காலை, மதியம் உணவு சென்னை மாநகராட்சி சார்பில் வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் கெட்டு போன உணவு வழங்கப்பட்டதால் தேர்தல் பணியாளர்கள் மிகுந்த வேதனை அடைந்தனர்.
மேலும் காலை உணவு தான் கெட்டு போனதாக உணவு வழங்கப்பட்டாலும், மதிய உணவானது நல்ல முறையில் வழங்கப்படும் என நினைத்த தேர்தல் பணியாளர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை தந்தது.
மதிய உணவு சப்பாத்தி அடங்கிய மினி மீல்ஸ் வழங்கப்பட்டது. ஆனால் அதில் வைக்கப்பட்டு இருந்த உணவுகள் அனைத்தும் கெட்டு போய் துர்நாற்றம் வீசியது. இதனால் தேர்தல் பணியாளர்கள் ஆதங்கம் அடைந்தனர்.
உடனே மத்திய சென்னை தொகுதியின் தேர்தல் நடத்தும் அதிகாரியான பிரவீன் குமாரை நேரில் சந்தித்து இது குறித்து புகார் தெரிவித்தனர்.
காலை உணவும் சரியில்லை, மதிய உணவும் சரியில்லை என்றால் என்ன செய்வது, எப்படி பணி புரிவது என ஆதங்கத்தோடு தேர்தல் அதிகாரி பிரவீன்குமாரிடம் முறையிட்டனர்.
உடனடியாக மாற்றித்தர ஏற்பாடு செய்வதாக கூறி, தேர்தல் பணியாளர்களை அனுப்பி வைத்தார்.
இதே கெட்டு போன உணவு தான் பத்திரிகையாளர்களுக்கும், புகைப்பட கலைஞர்களுக்கும், ஊடகத்தினருக்கும் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.