ஒடிசாவில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிக இடங்களில் முன்னிலை வகிக்கும் பாஜக, கடந்த 24 ஆண்டுகளாக நடைபெற்று வந்த நவீன் பட்நாயக்கின் ஆட்சிக்கு முடிவுரை எழுதவுள்ளது.
நாட்டின் 18வது மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்றது.
இதில் ஒடிசா உள்பட 4 மாநிலங்களுக்கு மக்களவை தேர்தலுடன் சேர்த்து சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடைபெற்று முடிந்தது.
இந்நிலையில் நாடு முழுவதும் நடைபெற்ற மக்களவைத் தேர்தல் மற்றும் 4 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களின் வாக்குகள் எண்ணப்பட்டன.
அதில் ஒடிசாவில் மொத்தமுள்ள 147 சட்டப்பேரவை தொகுதிகளில், பாஜக கூட்டணி 79 இடங்களில் முன்னிலை வகிப்பதால் ஆட்சியமைப்பது உறுதியாகியுள்ளது.
பீஜூ ஜனதா தளம் கட்சி 50 இடங்களையும், காங்கிரஸ் 15 இடங்களையும் பிடித்துள்ளது. இதனால் கடந்த 2000-ம் ஆண்டு மே மாதம் முதல் தொடர்ந்து 24 ஆண்டுகளாக முதலமைச்சராக பதவி வகித்து வந்த நவீன் பட்நாயக், மீண்டும் ஆட்சி அமைத்து தனது பதவியை தக்கவைக்கும் வாய்ப்பை இழந்துள்ளார்.
தேர்தல் பிரச்சாரத்தின் போது தமிழகத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வி.கே.பாண்டியனே, நவீன் பட்நாயக்கின் அரசியல் வாரிசு என விமர்சிக்கப்பட்டது.
இவ்விவகாரம் களத்தில் எதிரொலித்ததால் பாண்டியன் தனது அரசியல் வாரிசு இல்லை என நவீன் பட்நாயக் அறிவித்தார்.
இருப்பினும் நவீன் பட்நாயக் தற்போது தனது ஆட்சியை இழந்துள்ளார். அதுமட்டுமல்லாமல் சட்டப்பேரவைத் தேர்தலைப் போலவே, ஒடிசா மக்களவைத் தேர்தலிலும் பாஜக 19 இடங்களில் தொடர்ந்து முன்னிலையப் பிடித்து சாதனை படைக்கவுள்ளது.