மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், இத்தாலி, இலங்கை, மொரீஷியஸ் உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
மொரீசியஸ் பிரதமர் Pravind Kumar Jugnauth வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், வரலாற்று சிறப்புமிக்க 3-வது வெற்றியை பெற்றுள்ள பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவிப்பதாகவும், அவரது தலைமையில் உலகின் மிகப்பெரிய ஜனநாயகமான இந்தியா, தொடர்ந்து முன்னேற்றம் அடையும் என்றும் கூறியுள்ளார்.
மொரிஷியஸ்-இந்தியா இடையேயான கூட்டுறவு என்றும் நிலைத்திருக்கும் என்றும் அவர் உறுதி அளித்துள்ளார்.
இதேபோல், பிரதமர் மோடிக்கு இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி வாழ்த்து தெரிவித்துள்ளார். இருநாட்டு மக்களின் நலனுக்காகவும் நாம் இணைந்து பணியாற்றுவோம் என அவர் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே வெளியிட்டுள்ள வாழ்த்து பதிவில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு இதயங்கனிந்த வாழ்த்துகள் என்றும், பிரதமர் மோடி மீது இந்திய மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை இந்த வெற்றி வெளிக்காட்டுவதாகவும் கூறியுள்ளார். இந்தியாவுடனான உறவை மேலும் வலுப்படுத்துவதை எதிர்நோக்கியுள்ளதாகவும் ரணில் விக்கிரமசிங்கே பதிவிட்டுள்ளார்.