மீண்டும் 3 வது முறையாக பாஜக ஆட்சி அமைகிறது என்றாலும் உத்தர பிரதேச மாநிலத்தில் யாரும் எதிர்பார்க்காத தேர்தல் முடிவுகள் வந்திருக்கின்றன. 2014 மற்றும் 2019 ஆம் ஆண்டு தேர்தல்களில் பாஜகவின் கோட்டையாக இருந்த உத்தரப்பிரதேச மாநிலம் இம்முறை பாஜக வுக்குக் கைகொடுக்க வில்லை. பாஜக எங்கே கோட்டை விட்டது ? என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு .
இந்திய மாநிலங்களில் அதிகமான நாடாளுமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய மாநிலம் உத்தரபிரதேசம். 543 உறுப்பினர்கள் கொண்ட நாடாளுமன்றத்துக்கு 80 உறுப்பினர்களை அம்மாநிலம் தான் அனுப்பி வைக்கிறது. எனவே தான் டெல்லிக்குப் பாதை உத்தர பிரதேசம் என்பார்கள்.
2009ம் ஆண்டு 10 தொகுதிகளில் வென்ற பாஜக பிறகு 2014ம் ஆண்டு 71 தொகுதிகளில் வெற்றி பெற்றது. தொடர்ந்து , 2019 ஆம் ஆண்டு பாஜக 62 தொகுதிகளை கைப்பற்றியது.
உத்தரப்பிரதேசத்தில் இந்த தேர்தலில், சமாஜ் வாதி கட்சி 37 இடங்களிலும், காங்கிரஸ் 6 இடங்களிலும் என மொத்தம் 43 தொகுதிகளை INDIA கூட்டணிக்கு வழங்கிய உத்தர பிரதேச மக்கள், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 36 இடங்களையே வழங்கியிருக்கிறார்கள்.
2014ம் ஆண்டில், வாரணாசி தொகுதியில் தம்மை எதிர்த்து போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சியின் தலைவரான அரவிந்த் கெஜ்ரிவாலை கிட்டத்தட்ட 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார் பிரதமர் மோடி.
2019ம் ஆண்டு வாரணாசி தொகுதியில் தம்மை எதிர்த்து போட்டியிட்ட சமாஜ்வாதி கட்சியின் ஷாலினி யாதவை கிட்டத்தட்ட 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார் பிரதமர் மோடி.
ஆனால் இம்முறை, வாரணாசி தொகுதியில் போட்டியிட்ட பிரதமர் மோடி தம்மை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் அஜய் ராயை 1,52,513 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து, தொடர்ந்து 3வது முறையாக வெற்றி பெற்றுள்ளார்.
6 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் ஜெயிப்பார் என்று எதிர்பார்த்த பிரதமர் மோடியின் வெற்றி பலருக்கும் அதிர்ச்சியைத் தந்திருக்கிறது.
இது ஒரு புறம் இருக்க, உத்தர பிரதேச மாநிலத்தில் தான், 12 மத்திய அமைச்சர்கள் போட்டியிட்டனர். இதில் பிரதமர் மோடி உட்பட 5 அமைச்சர்கள் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர். மத்திய அமைச்சர்கள் ஸ்மிருதி ராணி, அஜய் மிஸ்ரா தேனி, பானு சிங் வர்மா, மகேந்திர நாத் பாண்டே, சஞ்சீவ் பாலயன், கௌஷல் கிஷோர், சாத்வி நிரஞ்சன் ஜ்யோதி ஆகிய 7 பாஜக மத்திய அமைச்சர்களும் தோல்வி அடைந்துள்ளனர்.
ராமர் கோவில் வாக்குறுதியை நிறைவேற்றிய நிலையில் அந்த கோயில் அமைந்துள்ள பைசாபாத் தொகுதியிலும் பாஜக வெற்றிபெற முடியவில்லை.
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 400 இடங்களுக்கு மேல் கிடைத்தால் , அரசியல் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து, OBC மற்றும் SC, ST இட ஒதுக்கீட்டை நீக்கி விடுவார்கள் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து தீவிரமாக பிரச்சாரம் செய்துவந்தது. மேலும் பாஜக ஆட்சியில் வேலைவாய்ப்பின்மை , எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம், கட்டுக்கடங்காமல் போகிறது என்றும் பிரச்சாரம் செய்தார்கள். இதனால் ஏற்பட்ட அச்சம் காரணமாக, மக்கள் பாஜகவிற்கு வாக்களிக்கவில்லை என தெரியவந்துள்ளது.
மேலும், விவசாயிகள் பிரச்சனை, உள்ளூர் பொருளாதார சிக்கல் ஏற்பட பாஜக ஆட்சியே காரணம் என மக்களிடம் பாஜக மீது வெறுப்புணர்வை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து தூண்டிவந்தன. மேலும் , மத்திய அரசின் அக்னிவீர் திட்டத்துக்கு எதிராக இளைஞர்களைத் திருப்பியதிலும் எதிர்கட்சிகளின் தூண்டுதல் இருந்ததாக கூறப்படுகிறது.
சமாஜ்வாதி கட்சியும், காங்கிரசும் பாஜகவுக்கு எதிராக இப்படி பிரச்சாரம் செய்த அதே வேளையில் , தங்கள் ஆட்சிக்கு வந்தால், 30 லட்சம் வேலைகள் தரப்படும் என்றும், ஏழை பெண்களுக்கு மாதம் 8500 ரூபாய் என ஆண்டுக்கு 1 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றும் வாக்குறுதிகள் அள்ளி வீசப்பட்டன.
இதற்கு சரியான பதிலடி கொடுக்காத பாஜகவின் தேர்தல் பிரச்சாரம் வியூகம் மக்களிடம் எடுபடாமல் போனது என்றே சொல்ல வேண்டும்.
ஏற்கெனவே குறைந்த வாக்கு வித்தியாசத்தில் 2019ம் ஆண்டு வெற்றி பெற்ற, அதே எம் பி க்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பளித்ததும் உத்தரபிரதேசத்தில் பாஜக தோல்வி அடைந்ததற்கு காரணங்களாக கூறப்படுகின்றன.
இது மட்டுமில்லாமல், பாஜகவை ஒரு மதவாத கட்சியாக சித்தரித்த சமாஜ்வாதி மற்றும் காங்கிரஸ் கட்சிகள், சாதி அரசியலை மிக லாவகமாக கையாண்டு, 2024ம் ஆண்டு தேர்தலை OBC மற்றும் SC, ST மக்களுக்கும், மேல்சாதி மக்களுக்கும் இடையேயான தேர்தலாக மாற்றியதை பாஜகவால் தடுக்க முடியாமல் போனது அக்கட்சியின் துரதிர்ஷ்டம் என அரசியல் கட்சி வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.