நாளை குடியரசுத் தலைவரை சந்தித்து ஆட்சியமைக்க காபந்து அரசின் பிரதமர் மோடி உரிமைக் கோர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மக்களவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 293 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இந்நிலையில், டெல்லியில் காபந்து பிரதமர் நரேந்திர மோடியின் இல்லத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி ஆட்சியமைக்க தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு, பீகார் முதல்வர் நிதிஷ்குமார் மற்றும் 7 சுயேட்சை கட்சிகள் ஆதரவு கடிதம் வழங்கினர். அப்போது மீண்டும் நரேந்திர மோடியை பிரதமராக்க, ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த நிலையில், நாளை குடியரசுத் தலைவரை சந்தித்து ஆட்சியமைக்க பிரதமர் மோடி உரிமைக் கோர உள்ளார். இந்த கூட்டத்தில் பாஜக தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித்ஷா, மராட்டிய முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, லோக் ஜனசக்தி கட்சி தலைவர் சிராக் பாஸ்வான் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்துகொண்டனர்.