தமிழகத்தில் தென் மேற்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டிதீர்த்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் கரும் மேகம் சூழ்ந்து கனமழை கொட்டி தீர்த்தது. இந்த கனமழையால் ரயில்வே மேம்பால சாலையில் தண்ணீர் குளம்போல் தேங்கியது. இதனால், வாகன ஓட்டிகள், பாதசாரிகள் சாலையை கடக்கமுடியாமல் அவதி அடைவதாகவும், வாகனங்கள் பழுதடைவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் கன மழை பெய்தது. அதிகளவில் சூறைக்காற்றுடன் மழை பெய்ததால் ஆங்காங்கே மரங்கள் முறிந்து விழுந்தன. சில பகுதிகளில் மின்கம்பங்கங்கள் சேதமடைந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டன. இதனால் 5க்கும் மேற்பட்ட தோல் தொழிற்சாலைகளில் மின்சாரமின்றி தொழில் பாதிப்பு ஏற்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் கனமழை பெய்த போது இடி தாக்கியதில் வேப்பமரம் தீப்பற்றி எரியும் வீடியோ சமூகவலைதளத்தில் பரவி வருகிறது. புதுக்கோட்டையில் பல்வேறு பகுதிகளில் திடீரென்று இடி மின்னலுடன் கூடிய மழை பெய்தது.