மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர் பயணிக்க ஏதுவாக இல்லாத 32 மெட்ரோ நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டு 2 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை மெட்ரோ நிலையங்களில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்கள் பயணிக்க ஏதுவாக, பின்பற்றவேண்டிய கோட்பாடுகளை கடந்த 2016ஆம் ஆண்டு மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டது.
இந்நிலையில் மாற்றுத்திறனாளிகள் இடையூறு இன்றி பயணிக்க சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் உரிய வசதிகள் செய்யப்படவில்லை என்றும், ஆகவே, மத்திய நகர்ப்புற அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி மெட்ரோ நிலையங்களை மாற்றியமைக்க வேண்டும் என்றும் வைஷ்ணவி ஜெயக்குமார் என்பவர் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
இதனைத்தொடர்ந்து கடந்த 2017ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், விதிகளை மீறி மெட்ரோ நிலையங்கள் கட்டப்பட்டிருந்தது தெரியவந்தது.
இந்நிலையில் விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள சென்னை மெட்ரோ ரயில் நிறுவனங்கள் ஆய்வு மேற்கொண்டு இரண்டு வாரங்களில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.