பழனி அருகே விவசாயநிலங்களில் புகுந்து பயிர்களை நாசம் செய்யும் காட்டுயானைகளை விரட்டுவதில் அலட்சியம் காட்டும் வனத்துறையினரை கண்டித்து விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ள ஆயக்குடி, கோம்பைபட்டி, வரதமாநதி உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களில் ஏராளமான பணப்பயிகள் பயிரிடப்பட்டு சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
கடந்த சில ஆண்டுகளாக விவசாய நிலத்திற்குள் காட்டு யானைகள் புகுந்து அட்டகாசம் செய்வதால் பல லட்ச ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து வனத்துறையிடம் பலமுறை புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.