இ.பி.எஸ், ஓ.பி.எஸ், சசிகலா ஆகியோரை ஒன்றிணைத்து அதிமுகவை மீண்டும் பலப்படுத்தும் வகையில், அதிமுக ஒருங்கிணைப்புக் குழு உருவாக்கப்பட்டுள்ளது என ஜே.சி.டி.பிரபாகர் அறிவித்துள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில், ஓபிஎஸ் அணியில் இருந்து விலகிய ஜே.சி.டி பிரபாகர், புகழேந்தி மற்றும் கே.சி.பழனிசாமி ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய அவர்கள், இதற்கு முன்னர் இவ்வளவு பெரிய வாக்குவங்கி சரிவை அதிமுக சந்தித்ததில்லை என்றும், இனிமேல் இதுபோன்ற தோல்விகளை அதிமுக தொண்டர்கள் தாங்க மாட்டார்கள் எனவும் தெரிவித்தனர்.
நாடாளுமன்றத் தேர்தலை பாடமாக எடுத்துக் கொண்டு மீண்டும் அதிமுகவினர் ஒன்றுபட வேண்டும் என்றும், ஓபிஎஸ், இபிஎஸ், சசிகலா ஆகியோரிடம் அதிமுக ஒன்றுபட பேச்சுவார்த்தை நடத்துவோம் எனவும் கூறினர்.
மேலும் இபிஎஸ்-க்கு பதிலாக புதிய நபரை தலைமையில் அமர்த்தினாலும் சம்மதமே என கூறிய அவர்கள், அதிமுகவில் அவரவருக்கு உரிய பொறுப்புகளைப் பெற்று கட்சியை வழிநடத்த விரும்புவதாகவும் தெரிவித்தனர்.