நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் ஆந்திரா மாநிலத்தில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்ஆர். காங்கிரஸ் மிக மோசமான தோல்வியை அடைந்திருக்கிறது. இதற்கான காரணங்கள் என்ன? என்பது பற்றி பார்க்கலாம்.
ஆந்திராவில் 2019ம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில், 151 சட்டமன்றத் தொகுதிகளிலும், 23 மக்களவை தொகுதிகளிலும் ஒய்.எஸ்ஆர். காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றது.
ஜெகன் மோகன் ரெட்டி ஆந்திராவின் முதல்வராக கடந்த 5 ஆண்டுகள் ஆட்சிப் பொறுப்பில் இருந்தார்.
இப்போது, நடந்து முடிந்த தேர்தலில், ஜெகன் மோகன் ரெட்டியின் கட்சி வெறும் பத்து சட்டமன்ற தொகுதிகள் மற்றும் நான்கு மக்களவைத் தொகுதிகளை மட்டுமே பெற்றுள்ளது.
இந்த படு தோல்விக்கு ஜெகன் மோகன் ரெட்டியின் அராஜக அரசியல் நடவடிக்கைகளே காரணம் என்று பரவலாக பேசப் பட்டாலும், அதையும் மீறி அவரின் தோல்விக்கு மேலும் பல காரணங்கள் இருக்கின்றன.
ஆட்சிக்கு வந்த உடன், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும் ஆந்திராவின் முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடுவின் இல்லத்தை இடித்ததில் இருந்தே , ஆந்திர மக்களின் செல்வாக்கை இழக்கத் தொடங்கினார் ஜெகன் மோகன் ரெட்டி.
2024 தேர்தலுக்குச் சில மாதங்களுக்கு முன் மீண்டும் சந்திரபாபு நாயுடுவைக் கைது செய்து சிறையில் அடைத்தது மக்களிடம் ஜெகன் மோகன் ரெட்டி மீதான கோபத்தை இன்னும் அதிகமாக்கியது. சந்திரபாபு நாயுடு மீது மக்களிடையே அனுதாபத்தை ஏற்படுத்தியது.
இது தான், ஆந்திர அரசியலில் மிகப் பெரிய திருப்புமுனையாக அமைந்தது. ஆந்திராவின் பெரும்பாலான இளைஞர்களின் ஆதரவைப் பெற்றிருக்கும் நடிகர் பவன் கல்யாணின் ஜன சேனா கட்சி, சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேச கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது.
ஜன சேனா, தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகள் , பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் ஒன்றாக தேர்தலைச் சந்தித்தது. இதனால்,தனித்து தேர்தலைச் சந்திக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார் ஜெகன் மோகன் ரெட்டி.
பிஆர்எஸ் கட்சி தலைவர் கேசிஆர், 2023 ஆம் ஆண்டு நடந்த தெலங்கானா தேர்தலில், பழைய வேட்பாளர்களை மாற்றாததால் தோல்வி அடைந்தார். ஆனால் ஜெகன்மோகன் ரெட்டி 102 தொகுதிகளில் புதுமுகங்களை நிறுத்தினார். இதுவும் அவருக்குப் பலனளிக்க வில்லை என்றே சொல்லவேண்டும்.
மேலும், தெலுங்கு தேசம் கட்சியின் பொது செயலாளரும் , சந்திரபாபு நாயுடுவின் மகனுமான , நர லோகேஷ், ஆந்திராவில் குப்பம் தொடங்கி ஸ்ரீகாகுளம் வரை கிட்டத்தட்ட 3000 கிலோமீட்டருக்கு மேல் பாத யாத்திரை மேற்கொண்டு, மக்கள் நேரடியாக சந்தித்தது, தேசிய ஜனநாயக கூட்டணிக்கு நல்ல பலனை தந்துள்ளது என்று கூறப்படுகிறது.
முதியவர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் பிற அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான, நலத்திட்டங்களில் மட்டுமே முழு கவனம் செலுத்திய ஜெகன் மோகன் ரெட்டி, அரசு ஊழியர்கள் விஷயத்தில் ,கோட்டை விட்டுவிட்டிருக்கிறார்.
டாக்டர்கள் மீதான தாக்குதல், ஆசிரியர்களின் அதிருப்தி, அங்கன்வாடி பணியாளர்கள் மீதான நடவடிக்கை, 8 லட்சம் அரசு ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவதில் குளறுபடி என்று மொத்த அரசு ஊழியர்களும் ஜெகனுக்கு எதிராக வாக்களித்திருக்கிறார்கள் என்றும் அரசியல் பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பவன் கல்யாண், சந்திரபாபு நாயுடு மற்றும் சந்திரபாபு நாயுடுவின் மகன் நாரா லோகேஷ் ஆகிய மூன்று பேரும் தொடர்ச்சியாக ஜெகன் மோகன் ரெட்டி மீது அடுக்கடுக்கான விமர்சனங்களை முன் வைத்தனர். ஒரு கட்டத்தில் அவரை சைக்கோ என்று கூட விமர்சனம் செய்தனர்.
மேலும், ஜெகன் மோகன் ரெட்டி நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்ற , அவரின் குடும்ப தொகுதியான கடப்பாவில் இம்முறை, அவரின் சொந்த தங்கை ஷர்மிளா காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்திருக்கிறார். அவரும் தனது பிரச்சாரங்களில், ஜெகன் மோகன் ரெட்டியை கடுமையாக விமர்சித்து பிரச்சாரம் செய்தது மாநிலம் முழுவதும் எதிர்ப்பலையை உருவாக்கியது என்றும் கூறப்படுகிறது. மேலும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு, போதைப்பொருள் நடமாட்டம் அதிகரிப்பு,
இது மட்டும் இன்றி, ஜெகன் மோகன் ரெட்டி கொண்டு வந்த நில உரிமைச் சட்டம் தொடர்பான தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரச்சாரம் மக்களிடையே பெரும் மாற்றத்தை ஏற்படுத்திவிட்டது .
கடந்த ஐந்து ஆன்டு காலத்தில், யாரையும் மதிக்காமல் சர்வாதிகாரி போல ஆட்சி நடத்திய ஜெகன் மோகன் ரெட்டி, தன் நடவடிக்கைகள் மூலமாகவே , தோற்று போயிருக்கிறார் என்று ஆந்திர மக்கள் கூறுகிறார்கள்.