18வது நாடாளுமன்றத்துக்கு தேர்வான உறுப்பினர்களில் 251 பேருக்கு எதிராக குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன என்றும், 27 உறுப்பினர்கள் குற்ற வழக்குகளில் தண்டனை பெற்றவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. அது குறித்த ஒரு செய்தி தொகுப்பு .
உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் 18வது மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடந்தன. மொத்தம் 543 இடங்களுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ளன.
பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. பிரதமர் மோடி மூன்றாவது முறையாக மீண்டும் பிரதமர் ஆகி இருக்கிறார்.
இந்த முறை, நாடாளுமன்றத்துக்குத் தேர்வாகி உள்ள உறுப்பினர்கள் தேர்தல் பிராமண பத்திரங்களில் வழங்கியுள்ள தகவல்களின் அடிப்படையில்,ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பு ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது .
குற்றப் பின்னணி கொண்ட மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை, 2009 ஆம் ஆண்டு 125 ஆகவும் , 2014 ஆம் ஆண்டு 185 ஆகவும், 2019ம் ஆண்டு 233 ஆகவும் தேர்தலுக்குத் தேர்தல் அதிகரித்து வருகிறது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு, 543 உறுப்பினர்களில் 46 சதவீதம் அதாவது, 251 உறுப்பினர்கள் மீது குற்ற வழக்குகள் உள்ளன என்றும், 27 உறுப்பினர்கள் தண்டனை பெற்ற குற்றவாளிகள் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
2009ம் ஆண்டில் இருந்ததை விட, இது 124 சதவீதம்அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. 18 வது மக்களவை உறுப்பினர்களில் 170 பேர் மீது கொலை,கொலை முயற்சி,ஆள் கடத்தல் , கொள்ளை,பாலியல் வன்கொடுமை மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றம் எனத் தீவிர குற்ற வழக்குகளில் விசாரணையில் உள்ளனர் என்றும், இது மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 31 சதவீதமாகும்.
கொலை வழக்குகளில் 4 பேரும் , கொலை முயற்சி வழக்கில் 27 பேரும், கடத்தல் வழக்குகளில் 4 பேரும், வெறுப்பு பேச்சு தொடர்பான வழக்குகள் 43 பேரும், பெண்களுக்கு எதிரான வழக்குகளில் 15 பேரும், அதில் பாலியல் வன்கொடுமை வழக்குகளில் 4 பேரும் உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குற்ற வழக்குடைய ஒருவருக்கு, மக்களவை தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புக்கள் 15.3 சதவீதமாகவும், எந்த குற்ற வழக்கும் இல்லாத ஒருவருக்கு வெற்றி வாய்ப்பு, வெறும் 4.4 சதவீதமாக உள்ளது என்றும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
ஏற்கெனவே ஒரு பொதுநல வழக்கு விசாரணையின் போது, அரசியலில் குற்றவாளிகளின் தலையீட்டைத் தடுப்பது தொடர்பாக , மத்திய அரசுக்கு ஏற்கெனவே 1997,1998 ஆம் ஆண்டுகளில் பரிந்துரைகள் அனுப்பப்பட்டன என்றும், ஆனால்,அது சம்பந்தமான அப்போதைய மத்திய காங்கிரஸ் அரசு எந்த முடிவையும் எடுக்கவில்லை என்றும், தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.
மேலும், மீண்டும் நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றும் படி சொல்லாமல் உச்சநீதிமன்றமே உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் வேண்டுகோள் வைத்திருந்தது.
அரசியலில் குற்றவாளிகள்,குற்ற வழக்கை எதிர்கொள்பவர்கள் தேர்தலில் போட்டியிட தடைவிதிக்கும் வகையில் கடுமையான சட்டத்தை இயற்ற வேண்டும் என்று வலியுறுத்திய, உச்ச நீதிமன்றம், குற்றம் சாட்டப் பட்டவர்களைக் கட்சியில் இருந்தும் நீக்க சட்டம் இயற்ற வேண்டும் என்றும் கூறியிருந்தது.
மேலும், ஊழல்வாதிகளாலும், குற்றவாளிகளாலும் இந்திய அரசியலின் ஆணிவேர் பட்டுப் போய்க் கொண்டிருக்கிறது.சமீப காலமாக குற்றவாளிகள் அரசியலில் ஈடுபடுவது, தேர்தலில் போட்டியிடுவது அதிகமாகி வருகிறது. இந்த போக்கு மக்களாட்சியின் மாண்புகளைக் குலைத்து விடும் என்ற அச்சம் ஏற்படுகிறது என்றும் உச்சநீதிமன்றம் கவலை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.