பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க 7 நாடுகளின் தலைவர்கள், பாஜக ஆளும் மாநில முதலமைச்சர்கள், பல்வேறு துறைகளில் பணியாற்றும் ஊழியர்கள் என சுமார் 8 ஆயிரம் பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடியின் பதவியேற்பு விழா டெல்லியிலுள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று இரவு 7.15 மணிக்கு நடைபெறவுள்ளது.
இதில், இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்க, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, பூடான் பிரதமர் Tshering Tobgay, நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹல், மாலத்தீவு அதிபர் முகமது முய்சு, மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜகுநாத், செஷல்ஸ் குடியரசு துணைத் தலைவர் Ahmed Afif ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.
இதேபோன்று, பாஜக ஆளும் மாநில முதலமைச்சர்கள், அக்கட்சியின் மூத்த தலைவர்கள், முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்கள், தொழிலதிபர்கள், திரைப்படம் மற்றும் விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த பிரபலங்களுக்கு பதவியேற்பு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், வந்தே பாரத் மற்றும் மெட்ரோ ரயில் பணியாளர்கள், சென்ட்ரல் விஸ்டா திட்டத்தில் பணியாற்றிய தொழிலாளர்கள், சுகாதார பணியாளர்கள், 3-ம் பாலினத்தவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுதவிர, மத்திய திட்டங்களின் பயனர்கள், பழங்குடியின பெண்கள், பத்ம விருது பெற்றவர்கள், பல்வேறு மதத் தலைவர்கள் உள்ளிட்ட சுமார் 8 ஆயிரம் பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.