சென்னை மாதவரம் பால் பண்ணையில் இருந்து வடசென்னை பகுதிக்கு விநியோகிக்கப்படும் ஆவின் பால் காலதாமதமாக விநியோகம் செய்யப்படுவதால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.
சென்னை மாதவரம் பால் பண்ணையில் இருந்து உற்பத்தி செய்யப்படும் ஆவின் பால், வடசென்னை பகுதிகளான கொளத்தூர், பெரம்பூர், வியாசர்பாடி, தொடங்கி மணலி, மீஞ்சூர் எண்ணூர் மற்றும் புரசைவாக்கம், ஓட்டேரி, சூளை, பாரிமுனை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.
ஆனால், கடந்த சில நாட்களாக ஆவின் பால் விநியோகம் காலதாமதமாவதாக பால் முகவர்கள் தரப்பில் தொடர்ந்து புகார்கள் எழுந்தன. இந்நிலையில், காலை 7 மணியாகியும் ஆவின் பால் கிடைக்காததால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.
மாதவரம் ஆவின் பால் பண்ணையில் பணியாளர்கள் பற்றாக்குறையால், பால் பாக்கெட்டுகள் ஏற்றுவதில் காலம் தாமதம் ஏற்படுகிறது. மேலும், ஒப்பந்த பணியாளர்களுக்கு பதிலாக நிரந்தர பணியாளர்களை உடனே நியமிக்க வேண்டும் என பால் முகவர்கள் தெரிவிக்கின்றனர்.