இந்திய வரலாற்றில் புதிய அத்தியாயம் படைக்கும் வகையில், மக்களவைத் தேர்தலில் மூன்றாவது முறையாக ஹாட்ரிக் வெற்றி பெற்ற மோடி, மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்றுக் கொண்டார்.
பிரதமர் மோடி மற்றும் அவரது அமைச்சரவை சகாக்கள் பதவியேற்பு விழாவையொட்டி, குடியரசு தலைவர் மாளிகை வாசமிகு பூக்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. திரும்பிய திசை எல்லாம் வண்ண விளக்குகளால் ஜொலித்தது. இரவு சரியாக 7 மணி 15 நிமிடத்திற்கு பிரதமராக மோடி பதவியேற்பார் என அறிவிக்கப்பட்ட நிலையில், குடியரசு தலைவர் மாளிகை நோக்கி மோடி வருகை தந்தார்.
பதவியேற்பு விழா மேடைக்கு வந்த மோடி, மேடையில் இருந்தவர்களுக்கும், விழாவுக்கு வருகை தந்தவர்களுக்கும், தனது கைகளை உயர்த்தி இருகரம் கூப்பி வணங்கினார். பின்னர், தனது இருக்கையில் அமர்ந்தார்.
பாரம்பரிய இசை முழங்க குடியரசு தலைவர் திரௌபதி முர்மு விழா மேடையை நோக்கி வருகை தந்தார். அப்போது, பதவி பிரமாணம் செய்து வைக்க பிரதமர் மோடி பெயர் மைக்கில் அறிவிக்கப்பட்டது. அப்போது, அங்கிருந்தவர்கள் விண்ணதிர கரகொலி எழுப்பி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
மிருந்த உற்சாகத்தோடு வருகை தந்த மோடிக்கு, குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். அப்போது, “நரேந்திர தாமோதிர தாஸ் மோடி என்னும் நான்” என பதவிப்பிரமாணம் ஏற்றுக் கொண்டார்.
பின்னர், குடியரசு தலைவர் திரௌபதி முர்முக்கு இருகரம் கூப்பி நன்றி தெரிவித்தார். அப்போது, விழா மேடையில் இருந்தவர்களும், விழாவுக்கு வருகை தந்தவர்களும் உற்சாகம் பொங்க, பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.