ஆந்திராவில் நடந்து முடிந்த பொது தேர்தலில் தெலுங்கு தேச கட்சி அமோக வெற்றி பெற்றதை அடுத்து, அமராவதி நகரின் ரியல் எஸ்டேட் விலை 3 நாட்களில் 100% வரை உயர்ந்துள்ளது. இதற்கான காரணம் என்ன? என்பது பற்றிய செய்தி தொகுப்பை பார்க்கலாம்.
தேர்தல் முடிவுகள் வெளியாகும் நாட்களில் பங்கு சந்தையில் பங்கு விலைகள் அதிகரிக்கும் என்பது இயல்பாக செய்தி தான். ஆனால், முதல் முறையாக , ஒரு ஊரின் ரியல் எஸ்டேட் விலை கிடுகிடுவென எக்குத்தப்பாக அதிகரித்துள்ளது.
மக்களவை தேர்தல் முடிவுகளால் பெரிதும் பயனடைந்துள்ள ஒரு ஊர் எதுவென்றால் அது ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் கிருஷ்ணா நதியின் வலது கரையில் அமைந்துள்ள அமராவதி தான். அங்கு ஏன் இப்படி ரியல் எஸ்டேட் விலை கூடுகிறது என்பதற்கு ஒரே பதில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு.
ஆந்திராவில் இருந்து தெலங்கானா தனி மாநிலமாக கடந்த 2014 ஆம் ஆண்டு பிரிக்கப்பட்டு , தெலுங்கானாவின் தலைநகரமாக ஹைதராபாத் அறிவிக்கப்பட்டது.
இதனால், ஆந்திராவுக்கு தலைநகர் இல்லாத ஒரு நிலை உருவானது. பிரிக்கப்பட்ட ஆந்திராவின் முதல் முதல்வரான சந்திர பாபு நாயுடு, ஆந்திராவின் தலைநகராக அமராவதியை உருவாக்க முடிவு செய்தார்.
50,000 கோடி ரூபாய்க்கு மேல் முதலீட்டில்,அமராவதியை ஒரு பசுமை தலைநகராக உருவாக்க திட்டமிட்டிருந்த சந்திர பாபு நாயுடு, அமராவதியில் THEME CITIES எனப்படும் ஒன்பது மேம்பட்ட நகரங்கள் மற்றும் அதன் சுற்றுப் புறப் பகுதியில் 27 புதிய நகரங்களை மேம்படுத்துவதற்கும் திட்டம் வைத்திருந்தார்.
இந்தப் பணிகளுக்காக, உலக வங்கியிடமிருந்து 300 மில்லியன் அமெரிக்க டாலர்களும், ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியிடமிருந்து 200 மில்லியன் அமெரிக்க டாலர்களும் பெறுவதற்கான உத்தரவாதத்தையும் நாயுடு அரசு பெற்றிருந்தது.
ஆனால், ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சி அமைந்ததும் யாரும் எதிர்பாராத வகையில் ஆந்திராவுக்கு 3 தலைநகரங்கள் உருவாக்கப்பட்டன.
அமராவதியில் சட்டப்பேரவையும், கர்னுாலில் உயர்நீதிமன்றமும்,விசாகப் பட்டினத்தில் தலைமை செயலகமும் அமைக்க ஜெகன் மோகன் ரெட்டி சட்டத் திருத்தம் கொண்டு வந்தார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. மாநிலம் முழுவதும் குறிப்பாக அமராவதியில் போராட்டம் தீவிரமானது. அமராவதி போராட்டம் என்று அழைக்கப்பட்ட போராட்டத்தால் ஜெகன் அரசு தமது திட்டத்தை திரும்பப் பெற்றார்.
அமராவதி தலைநகராக இருந்து வந்த நிலையில் மீண்டும் 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம்,ஆந்திராவின் ஆட்சி மற்றும் நிர்வாக மையமாக விசாகப் பட்டினம் மாற்றப்படும் என அம்மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது, ஒரு மாதத்துக்குள் ஆந்திராவின் தலைநகராக விசாகப்பட்டினம் மாறும் எனவும் அறிவிக்கப்பட்டது .
ஆந்திராவின் தலைநகரம் விசாகப்பட்டினம் என்று ஜெகன் மோகன் ரெட்டியின் திட்டம் சட்டச் சிக்கலில் சிக்கி, உச்ச நீதிமன்றத்தில் இருக்கிறது
அதனால் தான் தேர்தலுக்கு முன், ஜெகன் மோகன் ரெட்டி , 1 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகள் மூலம் விசாகப் பட்டினத்தை உலகளாவிய பெருநகரமாக மாற்றுவதற்கான 10 ஆண்டுகாலதிட்டமாக “விஷன் விசாகா” திட்டத்தை வெளியிட்டார்.
நடந்து முடிந்த தேர்தலில், மொத்தமுள்ள 175 சட்டமன்றத் தொகுதிகளில் பாஜக, தெலுங்கு தேச கட்சி, ஜன சேனாஆகிய தேசிய ஜனநாயக கூட்டணி 164 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. தெலுங்கு தேச கட்சியின் தலைவர் சந்திர பாபு நாயுடு மீண்டும் ஆந்திராவின் முதல்வராகிறார்.
2014 ஆம் ஆண்டு ஆந்திராவின் தலைநகரமாக அமராவதி அமையவேண்டும் என்று பல முயற்சிகள் எடுத்தவர் சந்திர பாபு நாயுடு. நவீன தகவல் தொழில்நுட்ப மையமாக, அதிநவீன உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டுடன் முழுமையாக அமராவதியை முன்னேற்றவும் அவர் திட்டமிட்டிருந்தார் என்று சொல்லப்படுகிறது. இப்போது, சந்திர பாபு நாயுடு முதல்வராகி இருப்பதால், அமராவதியின் ரியல் எஸ்டேட்டின் புதிய மறுமலர்ச்சியை உண்டாக்கி இருக்கிறது.
அமராவதியில் ஒரு சதுர அடிக்கு 1500 ரூபாய்க்கும் குறைவாக விற்பனையான நிலத்தின் விலை தற்போது,ஒரு சதுர அடிக்கு 5500 ரூபாயாக உயர்ந்துள்ளது.
2015 ஆண்டு அக்டோபர் மாதம், ஆந்திராவின் தலைநகரான அமராவதிக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே தான் அமராவதியில் நிலம் வாங்குபவர்களின் ஆர்வமும் கூடி இருக்கிறது.