தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கும் தெலுங்குதேசம் மற்றும் ஜனதா தளம் கட்சிகள் மத்திய அமைச்சரவையை அமைப்பதில் பிரதமர் மோடிக்குக் கடும் நெருக்கடிகளை அளிப்பார்கள் என எதிர்க்கட்சிகள் விமர்சனங்களை முன்வைத்த நிலையில், அவற்றை
எல்லாம் தவிடுபொடியாக்கியுள்ளார் பிரதமர் மோடி. இது சாத்தியமானது எப்படி? என்பது பற்றி பார்க்கலாம்.
மக்களவை தேர்தலில் பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 292 இடங்களில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, மோடி தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராக பதவிஏற்றுக்கொண்டார்.
தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளுக்கு உரிய அங்கீகாரம் அளிக்கவேண்டும் என்பதற்காகவே பிரதமர் மோடி இந்த முறை, 2014 ஆம் ஆண்டுக்குப் பிறகு மிக அதிக எண்ணிக்கையிலான அமைச்சரவையை அமைத்திருக்கிறார்.
அவருடன் 30 கேபினட் அமைச்சர்கள், தனிப் பொறுப்புடன் கூடிய 5 இணை அமைச்சர்கள் மற்றும் 36 இணை அமைச்சர்கள் உள்ளனர் என 71 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.
இந்த புதிய அமைச்சரவையின் அமைப்பைப் பார்த்தாலே, பிரதமர் மோடியின் சாதுர்யம் மற்றும் சமயோசிதம் தெரியவரும். பழைய முகங்களுடன் பல புதிய முகங்களையும் அமைச்சர்களாக்கி கூட்டணி ஆட்சிக்கான ஒரு புது இலக்கணத்தை உருவாக்கி இருக்கிறார் பிரதமர் மோடி.
தேர்தல் சமயத்தில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இட ஒதுக்கீட்டை முற்றிலுமாக நீக்கி விடுவார்கள் என்று அவதூறு பிரச்சாரம் செய்த நிலையில், அந்த பிரச்சாரம் பொய் என்பதை, தனது அமைச்சரவை தேர்வின் மூலம் நிரூபித்திருக்கிறார் என்றே சொல்லவேண்டும்.
பாஜகவிலிருந்து 61 பேருக்கும், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளில் இருந்து 11 பேருக்கும் அமைச்சர் பதவி வழங்கி இருக்கும் பிரதமர் மோடி, முறையாக ஓபிசி பிரிவிலிருந்து 27 பேரையும், எஸ்சி பிரிவிலிருந்து 5 பேரையும், எஸ்டி பிரிவிலிருந்து 4 பேரையும் அமைச்சர்களாக்கி சமூக நீதிக்குப் பெருமை சேர்த்திருக்கிறார்.
மோடி 3.0 வில், இந்தியாவின் எல்லாப் பகுதிகளுக்கும் பிரநிதித்துவம் கொடுக்கப் பட்டிருப்பதைப் பார்க்க முடிகிறது.
வடக்கிலிருந்து 18 அமைச்சர்களும்,மேற்கில் இருந்து 17 அமைச்சர்களும்,கிழக்கில் இருந்து 15 அமைச்சர்களும், தெற்கில் இருந்து 13 அமைச்சர்களும், இந்தியாவின் மத்திய பகுதியிலிருந்து 6 அமைச்சர்களும், வடகிழக்கு பகுதியிலிருந்து 3 அமைச்சர்களும் பிரதமர் மோடியின் அமைச்சரவையில் பங்கு பெறுகின்றனர்.
முன்னாள் அமைச்சர்களில் 14 பேர் தேர்தலில் போட்டியிடவில்லை என்ற நிலையில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர்களில் 19 பேர் வெற்றிபெறவில்லை. வெற்றிபெற்றவர்களிலும் , 6 முன்னாள் அமைச்சர்களுக்குப் புதிய அமைச்சரவையில் இடம் கொடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கெனவே, கடந்தமுறை பிரதமர் மோடியின் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த அமைச்சர்களில் இருந்த 33 பேர் மட்டுமே இம்முறை அமைச்சர்களாகி இருக்கின்றனர் என்பதில் இருந்தே பிரதமர் மோடியின் விட்டுக் கொடுக்கும் தன்மையும் , கூட்டணிக் கட்சிகளை அரவணைத்து செல்லும் பாங்கும் தெரிய வருகிறது.
மோடி 2.0 வில், 6 பெண் அமைச்சர்கள் இடம்பெற்றிருந்த நிலையில், மோடி 3.0 வில் 7பெண் அமைச்சர்கள் இடம் பெற்றுள்ளனர் என்பது பெண்களுக்கு தந்த அங்கீகாரம் என்றே பார்க்கப் படுகிறது.
கேரளாவில் இருந்து ஒரே ஒரு நாடாளுமன்ற உறுப்பினரைப் பெற்றபோதும் அம்மாநிலத்துக்கு 2 அமைச்சர்கள் வழங்கியிருக்கும் பிரதமர் மோடி, அதே போல், எந்த தொகுதியிலும் பாஜக கூட்டணிக்கு வெற்றி கிடைக்காத பஞ்சாப் மற்றும் தமிழகத்தில் இருந்து தலா ஒரு அமைச்சர் பதவி வழங்கி அந்த மாநில மக்களுக்குப் பெருமை சேர்த்திருக்கிறார்.
கூட்டணி ஆட்சியில் எப்போதுமே கூட்டணி கட்சிகள் தங்கள் கட்சியின் கொள்கைக்கேற்ப அரசு நிர்வாகத்தை வளைக்க முற்படுவது இயல்பானது என்பார்கள். இதைப் பிரதமர் மோடியால் சமாளிக்க முடியாது என்று எதிர்க்கட்சிகள் கூறி வந்தன. அதற்கும் பதிலடியை தனது செயலால் கொடுத்திருக்கிறார் பிரதமர் மோடி.
ஏற்கெனவே ஒரு மாநிலத்தின் முதல்வராக இருந்த அனுபவம் உடையவர்களுக்கு, மக்களின் முன்னேற்றத்துக்காக வேறுபட்ட கருத்துடைய வெவ்வேறு கட்சிகளையும் இணைந்து பணியாற்ற வைக்கும் திறமை ஒரு சிறந்த மாநில முதலமைச்சருக்கு நிச்சயம் இருக்கும்.
எனவே தான், பிரதமர் மோடி, தனது அமைச்சரவையில் தம்மை தவிர 6 முன்னாள் மாநில முதல்வர்களை தனது அமைச்சரவையில் இணைத்துக் கொண்டிருக்கிறார். இதில் கர்நாடகாவின் முன்னாள் முதலமைச்சர் எச்.டி குமாரசாமி மற்றும் பீகாரின் முன்னாள் முதலமைச்சர் ஜிதான் ராம் மாஞ்சி ஆகிய இருவரும் பாஜக கூட்டணிக் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது.
பிரதமர் மோடியின் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் தெலுங்கு தேசம் கட்சித் தலைவரான சந்திர பாபு நாயுடுவும், ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவரும் பீகாரின் முதல்வருமான நிதிஷ் குமாரும், முக்கியத்துறைகளைக் கைப்பற்ற முயற்சி செய்வார்கள். கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துவார்கள் என்றெல்லாம் எதிர்க்கட்சிகள் வதந்திகள் பரப்பின.
தங்கள் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து கோரிக்கை வைத்திருக்கும் நிலையில், பிரதமர் மோடியுடன் இணக்கமாக செல்வதைத் தவிர வேறு வழி கிடையாது என்பது அவர்களுக்குத் தெளிவாகவே தெரியும் என்பதால், அவர்கள் எந்த சிக்கலையும் உண்டாக்க மாட்டார்கள் என்பதும் பிரதமர் மோடிக்கு நன்றாகவே தெரியும்.
ஐக்கிய ஜனதா தளத்தில் இருந்து 2 பேர்களும் என்பதும் லோக் ஜனசக்தி கட்சி கட்சியில் இருந்து ஒருவரும், இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சியில் இருந்து ஒருவரும், பாஜகவில் இருந்து நான்கு பேர்களும் என பீகாரில் இருந்து 8 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சர் பதவி வழங்கி இருக்கிறார் பிரதமர் மோடி.
அது போல ஆந்திராவைப் பொறுத்தவரை, தெலுங்கு தேச உறுப்பினர்கள் 2 பேருக்கு அமைச்சர் பதவி வழங்கி இருக்கிறார் .
மேலும், இந்த ஆண்டு சட்டமன்ற தேர்தலைச் சந்திக்கும், ஹரியானா,மகாராஷ்டிரா,மற்றும் ஜார்க்கண்ட் மாநிலத்துக்கும் உரிய பிரதிநித்துவத்தைப் பிரதமர் மோடி கனகச்சிதமாக தனது அமைச்சரவையில் கொண்டுவந்து எல்லோரையும் ஆச்சரியப் பட வைத்திருக்கிறார். அதாவது மகாராஷ்டிராவிலிருந்து 7 பேரும், ஹரியானாவிலிருந்து 3 பேரும் ஜார்கண்ட்டில் 3 பேரும் அமைச்சர்களாகி இருக்கிறார்கள்.
தொடர்ந்து 3வது முறையாக இந்தியாவின் பிரதமராக பதவி ஏற்று, வரலாற்று சாதனை படைத்திருக்கும் பிரதமர் மோடி, அமைச்சரவை அமைத்த விதத்திலும் சாதனை படைத்திருக்கிறார்.
எல்லோருடைய நம்பிக்கைகளுடன்,எல்லோருடனுடன், எல்லோருக்குமான வளர்ச்சி, என்ற தாரக மந்திரத்தின் அடையாளமாகவே மோடி 3.0 அமைச்சரவை அமைந்து இருக்கிறது என்று எல்லோரும் பாராட்டுகிறார்கள்.