புதுச்சேரியில் கழிவறைக்கு சென்ற ஒரு சிறுமி உட்பட 3 பெண்கள் விஷ வாயு தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, மேலும் 2 பெண்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
புதுச்சேரி ரெட்டியார்பாளையம் புதுநகர் பகுதியைச் சேர்ந்த செந்தாமரை என்ற மூதாட்டி, தனது வீட்டிலுள்ள கழிவறைக்குச் சென்றபோது அங்கேயே மயங்கி விழுந்தார். அவரது மகள் காமாட்சியும், பக்கத்து வீட்டு 15 வயது சிறுமியும் மூதாட்டியை காப்பாற்றச் சென்றபோது அவர்களும் மயங்கி விழுந்தனர். அருகிலிருந்தவர்கள் மூவரையும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில், செந்தாமரையும், காமாட்சியும் வழியிலேயே உயிரிழந்தனர்.
சிகிச்சை பலனின்றி 15 வயது சிறுமியும் உயிரிழந்தார். இதேபோன்று, அதே பகுதியிலுள்ள மற்றொரு வீட்டிலும் கழிவறையைப் பயன்படுத்திய 2 பெண்கள் மயங்கி விழுந்தனர். அவர்கள் இருவரும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அந்தப் பகுதியில், வீடுகளின் கழிவறைகள் பாதாள சாக்கடையில் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளதாகவும், பாதாள சாக்கடையில் ஏற்பட்ட அடைப்பின் காரணமாக விஷவாயு வெளியேறியதாகவும் கூறப்படுகிறது. அதனை சரி செய்யும் வரை புதுநகர் பகுதியில் உள்ள பொதுமக்கள் யாரும் கழிப்பறையை பயன்படுத்த வேண்டாம் எனவும் உழவர் கரை நகராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் சம்பவ இடத்தில் மாவட்ட நேரில் ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து, முதலமைச்சர் ரங்கசாமியும் ரெட்டியார்பாளையத்தில் நேரில் ஆய்வு செய்தார்.