காங்கிரஸில் உள்ள குற்றவாளிகளை கண்டறிந்து உடனடியாக கூவம் நதியில் வீச வேண்டும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் பேசியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை காமராஜர் அரங்கில், தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கட்சியின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் அக்கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் நடைபெற்றது. இதில், தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர்கள் கே.எஸ்.அழகிரி, கே.வி.தங்கபாலு, ஈவிகேஎஸ்.இளங்கோவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் பேசிய ஈவிகேஎஸ்.இளங்கோவன் தமிழகத்தில் யாராக இருந்தாலும் காமராஜர் பெயரை சொல்லித்தான் ஆட்சி நடத்த வேண்டும் என்றார்.இந்த தேர்தலில் காங்கிரஸ் 10 தொகுதிகளில் வெற்றி பெற்றதற்கு திமுக கூட்டணியே காரணம் என்றும், தமிழகத்தில் காமராஜர் ஆட்சி அமைக்க வேண்டும் என்று கூறினால் மட்டும் போதாது, அதற்கு தந்தரமும் வேண்டும் எனவும் கூறினார். மேலும் காங்கிரஸில் உள்ள குற்றவாளிகளை கண்டறிந்து உடனடியாக கூவம் நதியில் வீச வேண்டும் என்றும் அவர் பேசியது அக்கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.