குவைத்தில் அடுக்குமாடி குடியிருப்பு தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை விரைவில் இந்தியா கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
குவைத்தின் மங்கஃப் பகுதியில் உள்ள அடுக்குமாடி கட்டடம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 53 பேர் உயிரிழந்த நிலையில், அதில் 40-க்கும் மேற்பட்டவர்கள் இந்தியர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளவர்களை, குவைத் நாட்டு துணைப் பிரதமரும், பாதுகாப்புத்துறை அமைச்சருமான ஷேக் ஃபஹத் யூசுப் அல் சபா நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறினார்.
இதனிடையே தீ விபத்தில் பலியானவர்களுக்கு, பிரதமர் மோடி மற்றும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும், தீ விபத்தில் படுகாயம் அடைந்தவர்களுக்கு தேவையான உதவிகள் அனைத்தும் வழங்கப்படும் என்றும் ஜெய்சங்கர் அறிவித்துள்ளார்.
மேலும் உயிரிந்தவர்களின் உடல்களை இந்தியா கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதகாவும் அவர் கூறினார். இதுதொடர்பாக குவைத் நிர்வாகத்திடம் தொடர்பில் உள்ளதகாவும் அவர் கூறினார்.
தீ விபத்து ஏற்பட்ட அடுக்கு மாடி குடியிருப்பின் உரிமையாளரான கேரளாவைச் சேர்ந்த கே.ஜி.ஆபிரகாமை கைது செய்ய குவைத் அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும், அஹமதி முனிசிபாலிட்டி அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இதனிடையே பிரதமர் மோடி உத்தரவின்பேரில், இந்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் குவைத் செல்கிறார்.