நீட் தேர்வில் கருணை மதிப்பெண் பெற்ற 1,563 மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்தப்படவுள்ளதாக உச்சநீதிமன்றத்தில் தேசிய தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது.
நீட் தேர்வில் என்சிஇஆர்டி பாடப்புத்தகங்களில் மேற்கொள்ளப்பட்ட சில மாற்றங்களாலும், தேர்வறையில் நேரத்தை இழந்ததாலும் 1,563 மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டன. இதனால் 67 மாணவர்கள் நூறு சதவீத மதிப்பெண்கள் பெற்றது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் விசாரணைக்கு வந்தன. அப்போது, மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கியது குறித்து ஆராய குழு அமைக்கப்பட்டிருப்பதாகவும், சம்பந்தப்பட்ட 1,563 மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்த முடிவு செய்திருப்பதாகவும் தேசிய தேர்வுகள் முகமை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 23-இல் நீட் மறுதேர்வு நடத்தப்பட்டு ஜூன் 30-க்குள் முடிவு வெளியிடப்படும் என்றும் தேர்வுகள் முகமை கூறியுள்ளது. இதைக் கேட்டறிந்த நீதிபதிகள், மருத்துவக் கலந்தாய்வு நடைமுறைக்கு எவ்வித தடையுமில்லை என்று தெரிவித்துள்ளனர்.