குவைத் அடுக்குமாடி குடியிருப்பு தீ விபத்தில் தமிழகத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே உடல்களை இந்தியா கொண்டு வருவதற்காக இந்திய விமானப்படை விமானம் குவைத் விரைகிறது.
குவைத்தில் இயங்கி வரும் என்.பி.டி.சி. நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் மங்காப்பில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி இருந்தனர்.
அங்கு உள்ள ஒரு வீட்டில் நேற்று அதிகாலையில் சமையல் செய்து கொண்டிருந்தபோது திடீரென தீ விபத்து ஏற்பட்டது. மளமளவென பரவிய தீ அடுத்தடுத்த வீடுகளுக்கும் பரவியது. இந்த விபத்தில் 40 இந்தியர்கள் உள்ளிட்ட 49 பேர் உயிரிழந்தனர்.
50க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இதில் தமிழகத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்திருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் தென்னவனூர் கிராமத்தைச் சேர்ந்த கருப்பணன் ராமு,கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவிலைச் சேர்ந்த சின்னத்துரை, தஞ்சை மாவட்டம் பேராவூரணியை சேர்ந்த புனாப் ரிச்சர் ராய் உள்ளிட்டோர் பலியானதாக கூறப்படுகிறது.
இதனிடையே டிஎன்ஏ சோதனை மூலம் உயிரிழந்தவர்களின் உடல்களை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது. உயிரிழந்தவர்களின் உடல்களை இந்தியா கொண்டு வருவதற்காக இந்திய விமானப்படை விமானம் குவைத் விரைந்துள்ளது.
இதுதொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் குவைத் வெளியுறவுத்துறை அமைச்சருடன் தொடர்பு கொண்டு பேசினார்.
இதேபோல் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அமைச்சர் செஞ்சி மஸ்தானுடன் ஆலோசனை நடத்தினார். இதனிடையே தீ விபத்து தொடர்பாக விரிவான விசாரணை நடத்த குவைத் மன்னர் உத்தரவிட்டுள்ளார்.