குவைத் தீ விபத்தில் 42 இந்தியர்கள் உயிரிழந்த நிலையில், அவர்களது குடும்பத்தினருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ஆளுநர் ஆர்.என்.ரவி விடுத்துள்ள இரங்கல் குறிப்பில், குவைத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் விலைமதிப்பற்ற உயிர்கள் பலியாகியிருப்பது மிகுந்த வேதனையை அளிப்பதாகக் கூறியுள்ளார்.
மேலும், தங்களின் அன்புக்குரியவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்த அவர், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் கூறியுள்ளார்.
மத்திய அமைச்சர் எல்.முருகன் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், குவைத் தீ விபத்தை அறிந்த உடனே பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி, வெளியுறவுத்துறை இணையமைச்சர் கீர்த்தி வரதன் சிங்கை அந்த நாட்டிற்கு அனுப்பி வைத்துள்ளதாகவும்,
பலியானவர்களின் உடல்கள் இந்தியாவில் உள்ள அவர்களின் உறவினர்களிடம் விரைந்து சேர்க்கப்படும் என்றும் கூறியுள்ளார். காயமடைந்த இந்தியர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளும், நிவாரணங்களும் உடனடியாக வழங்கப்படும் என்றும் எல்.முருகன் உறுதியளித்துள்ளார்.